சென்னை: தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் நடப்பாண்டு, 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் உயர் கல்வியில் எந்தப் படிப்பில் சேர விரும்பம் என்பதை பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுக்க உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் சுதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு முடிந்து, தாம் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் உயர் கல்விப் படிப்புகள் தொடர செய்தல் வேண்டும்.
நடப்பாண்டில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி படிப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆர்வம் ஏற்படுத்தி, அதன் மூலம் விருப்பப் பாடங்களை தேர்வு செய்வதற்கான திறன்களை வளர்த்து, 2023-24ஆம் கல்வியாண்டில் உத்தேசமாக தாங்கள் பயில விரும்பும் 3 பாடப்பிரிவுகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் குறித்த விழிப்புணர்வை வரும் 7 முதல் 9ஆம் தேதி வரை பள்ளிகளில் ஏற்படுத்திட வேண்டும். மேலும் வரும் 12ஆம் தேதி மாணவர்களிடம் தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளுக்கான பட்டியலை உயர்கல்வியில் சேர்வதை உறுதிப்படுத்தும் வகையில் சேகரித்து, நான் முதல்வன் திட்ட இணையப்பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:'போட்டித் தேர்வை வெல்வது இனி ஈஸி' புதிதாக மாற்றப்படும் கல்லூரி பாடத்திட்டம்!