சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, செப்டம்பர் ஒன்றாம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, நவம்பர் ஒன்றாம் தேதிமுதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. தற்போது அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தினாலும் அவர்களிடம் கற்றல் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
வீடு பக்கத்தில் கல்வி
அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்குவதற்கு, ஒன்றிய அரசின் ”சமக்ர சிக்ஷா” திட்டத்தின் மூலம்நடப்புக் கல்வியாண்டிற்கான பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்மூலம் கற்றல் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலோ அல்லது வீடுகளுக்கு அருகிலோ சென்று பயிற்றுவிக்கப்படும்
அதன் அடிப்படையில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பைக் குறைப்பதற்காக, தினமும் ஒன்றரை மணி நேரம், தன்னார்வலர்களைக் கொண்டு குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மக்கள் பள்ளி என்கிறத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டம் குறித்து அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில், பள்ளிக் கல்வித் துறை விவாதிக்க உள்ளது. மக்கள் பள்ளித் திட்டம் அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகச் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே கிராமசபை கூட்டத்தில் இது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். ஆகையால் கல்வித் துறை அலுவலர்கள் கிராமசபை கூட்டங்களில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மக்கள் பள்ளி என்கிறத் திட்டத்தின் மூலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பள்ளி திட்டத்தினை முதலில் விழுப்புரம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய எட்டு மாவட்டங்களில் ஆரம்பிக்கவுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் எனவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து பள்ளியின் அருகில் சரியாகப் படிக்காத மாணவர்களுக்கு கற்பிக்க விரும்பும் ஆசிரியர்கள், அதற்கெனத் தனியாகப் பதிவு செய்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'சிபிஎஸ்இ பாடத்தில் நானம்மாள் குறித்த பாடம் வந்துள்ளது மகிழ்ச்சி'