தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து சமய அறநிலையத்துறை தூங்கிக்கொண்டு இருக்கிறது - உயர் நீதிமன்றம் கடும்கண்டனம்

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கொண்டு இருக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை தூங்கி கொண்டு இருக்கிறது
இந்து சமய அறநிலையத்துறை தூங்கி கொண்டு இருக்கிறது

By

Published : Jun 28, 2022, 3:53 PM IST

சென்னை:பொன்னேரியில் அமைந்துள்ள அருள்மிகு காளத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 18.72 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி சீனிவாசன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்குத்தொடர்பாக கோயிலுக்குச் சொந்தமான 18 இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளில் 14 இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவற்றை அகற்ற அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரினார். மேலும், தமிழ்நாட்டில் தற்போது வரை 1100 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள், கோயில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இதைத் தடுக்க வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கொண்டு இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சம்பளம் பெற்றும் சரிவர பணியாற்றாத இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள்?: கோயில் நிலங்களில் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்படுவதாக, வழக்குகள் தொடரப்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்த நிறுத்த வேண்டிய இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் வெறும் சம்பளத்தை மட்டும் வாங்கிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் வரை அறநிலையத்துறை அலுவலர் என்னதான் செய்கிறார்கள்? என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்றம் உத்தரவு போட்டதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் அலுவலர்கள் செயல்படுவது எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார்.

வரலாற்றுச்சிறப்பு மிக்க பல்வேறு கோயில்கள் இன்னும் முறையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளதற்கும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் செயல்படாத நிலையே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். 50 ஆண்டுகாலமாக உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், இப்பொழுது வந்து கடந்த ஒரு ஆண்டுகாலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.

கோயில் நில குத்தகை மூலம் வருமானம் வருவதால், அது இந்து சமய அறநிலையத்துறைக்கு பயன் என்பதால் தான், கோயில் நிலங்களை குத்தகைக்கு விட நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிய ஆட்டோ டிரைவர் - காப்பாற்றிய போக்குவரத்து காவலர்

ABOUT THE AUTHOR

...view details