தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கம் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டும், 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு கட்டங்களில் அலுவலர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த நிலையில் கரோனா நோய்த் தொற்று படிப்படியாக தமிழ்நாட்டில் குறைந்து வரும் சூழலில், மத்திய அரசு அக்டோபர் 15ஆம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறப்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் திபாவளி பண்டிகைக்குப் பின்னர், நவம்பர் 16ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. அதனைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள், தனியார் பள்ளி நிர்வாகத்துடன் பள்ளிகள் திறப்பு குறித்த கருத்துகளை நவம்பர் 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்து கேட்பு கூட்டம் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் கருத்துக் கேட்பு நடைபெறும் பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை அறிவித்துள்ளார்.