கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படாமல் உள்ளது.
இதற்கிடையே அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் மாதம் முதல் மாணவர் சேர்க்கை தொடங்க அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், தற்போது வரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து விஜயதசமி நாளன்று அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனியப்பன் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது குறித்து அவர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் விஜயதசமி நாளன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை முதன்முறையாக பள்ளியில் சேர்ப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் வரும் 26ஆம் தேதி விஜயதசமி நாளன்று மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர் அறியும் வகையில் ஊர் பொது இடங்களில் பதாகைகள் வைத்தும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கூட்டங்கள் நடத்தி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி விஜயதசமி நாளன்று 5 வயதுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடியில் படிக்கும் ஐந்து வயதுடைய குழந்தைகள், பள்ளியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வரும் பெற்றோரை இன்முகத்துடன் வரவேற்று, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். மேலும் அன்றைய நாளிலேயே குழந்தைகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீட்டை தொடரவும்... நுழைவுத்தேர்வை நீக்கவும்...