சென்னை:ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான மழைக்கால நோய்கள் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தான கலந்தாய்வு கூட்டமானது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் இன்று (செப்.16) நடைபெற்றது.
மக்கள் நல்வாழ்வுத்துறையைப் பொறுத்தவரை 12 ஆயிரம் மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றன. மருத்துவக் கட்டமைப்புகள் முழுமையாகும் வகையில் சுகாதாரமான சூழ்நிலையில் பராமரிக்க வேண்டும் என்கின்ற வகையில் பல்வேறு கருத்துக்ககளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
மேலும், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர், தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் பங்கேற்று துறை அலுவலர்களுக்கு பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறியிருந்தனர்.
இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், "டெங்கு, மலேரியா போன்ற நோய் பாதிப்புகள் பருவமழைக்கு முன்னால் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் போன்ற மாதங்களில் அதிகரிப்பது என்பது இயல்பு. கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறையும், ஊரக உள்ளாட்சித் துறையும், நகர்ப்புற உள்ளாட்சித் துறையும் இணைந்து, இந்த மூன்று துறையின் செயலாளர்கள், அந்தந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் டெங்கு போன்ற பாதிப்புகளுக்கு காரணமான கொசு உற்பத்தியை தடுப்பதற்கும், டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அப்போது ஆலோசனை செய்யப்பட்டது. அந்த வகையில், கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகளவில் இல்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 48ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 3 மரணங்களும் நிகழ்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டுகளைப் பொறுத்தவரை டெங்குவினால் பெரிய அளவிலான பாதிப்புகள் என எதுவும் இல்லை. 2015ஆம் ஆண்டு ஒரே ஆண்டில் ஏற்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 204. இறப்பு 66 பேர். அதைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 294 பேர். மேலும் மத்திய அரசு, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக அறிக்கையினை வெளியிட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், மாநகராட்சியின் சுகாதார அலுவலர்கள் என்று 296 முக்கியத்துவம் பெற்ற அலுவலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.
தற்போது டெங்கு பாதிப்பில் வருகிற 3 மாதம் காலம் என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் ஆகும். பருவ மழை தொடங்குகின்ற சூழ்நிலையில், தண்ணீர் தேங்குகின்ற நிலையினைக் குறைப்பதற்கும், பொதுப்பணித் துறையினரின் கட்டுமானப் பணிகளில் தேங்கியிருக்கும் தேவையற்ற தண்ணீரினை கண்காணிப்பதற்கும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களது வீடுகளில் உள்ள சுற்றுப்புறங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அதேபோல் உணவுப் பொருட்களை தயாரிக்கின்ற நிறுவனங்கள், உணவகங்கள், சிறு விடுதிகள் போன்ற இடங்களிலும் எப்படிப்பட்ட கண்காணிப்புகள் இருக்க வேண்டும் என்பது குறித்தும் இந்தக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கும்பகோணத்தில் மேலும் இருவருக்கு டெங்கு பாதிப்பு உறுதி!