சென்னை:மதுரவாயல் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுவனின் தாயருக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து, அவர் அந்த பகுதியில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து சுகாதார நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தது, "தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 954 நிரந்தர கொசு ஒழிப்பு பணியாளர்களும், 2324 ஒப்பந்த பணியாளர்களும் மொத்தம் 3278 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 424 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்பிரேயர்கள், 324 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 1 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்குக் காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி பல வகைகளில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. சென்னையில் உள்ள சுமார் 17 லட்சம் வீடுகளின் பகுதிகளை சிறுவட்டங்களாக (Sector) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டத்திற்கும் சுமார் 500 வீடுகள் கொண்ட தெருகளில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான, மேல்நிலை/கீழ்நிலைத் தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் (டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் குடங்கள் மற்றுமுள்ளவைகள்) ஆகியவற்றை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அதனை அழித்திட நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.