தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துவருகிறது. பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் மரணங்கள் ஏற்பட்டுள்ளன. டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், அதிகபட்சமாக வேலூரில் 700-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர் - dengu fever symptoms
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தலைமைச் செயலர் சண்முகம் காணொலிக் காட்சி மூலமாகத் தலைமைச் செயலகத்திலிருந்தபடியே ஆய்வு செய்தார்.
![டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4760071-thumbnail-3x2-hja.jpg)
கொசு மருந்து தெளித்தல், வீடுகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்தல், பள்ளி கல்லூரிகளில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக விழிப்புணர்வு முகாம்கள் நடத்துதல், டெங்கு புழுக்களை உற்பத்தி செய்யும் வகையில் செயல்படுபவர்களுக்கு அபராதம் விதித்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது.
இந்நிலையில், இன்று தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் அலுவலர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. மேலும் காணொலிக் காட்சி (Video Conferencing) வழியே அனைத்து மாவட்டங்களில் தலைமைச் செயலர் ஆய்வு மேற்கொண்டு தேவையான அறிவுரையை வழங்கினார். காலையில் 15 மாவட்டங்களும் பிற்பகலில் மீதி மாவட்டங்களும் ஆலோசனையில் பங்கேற்றன.