சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் (33). சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வரும் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெருங்குடி, ராஜா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது சக வழக்கறிஞர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டிற்கு நேற்றிரவு 9 மணியளவில் சென்றுள்ளார்.
அப்போது அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் காத்திருந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருவர், வழக்கறிஞர் ஜெய்கணேஷை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த வழக்கறிஞர், அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே வழக்கறிஞர் ஜெய்சங்கர் உயிரிழந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் சக வழக்கறிஞர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவிய நிலையில் பாதுகாப்புக்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
அப்போது, அங்கு கூடியிருந்த வழக்கறிஞர் சங்கத்தினர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல் துறையினர் குற்றவாளிகள் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததைத்தொடர்ந்து வழக்கறிஞர் சங்கத்தினர் கலைந்து சென்றனர். மேலும் இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் பின்னர் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த உயிரிழந்த ஜெய்கணேஷின் நண்பர் ஜெய்சங்கர், 'உயிரிழந்த வழக்கறிஞருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பெற்றோருக்காக காதலை மறுத்த பெண்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்; கோவையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்