இலங்கை கடற்படையால் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசுகையில், இலங்கை கடற்படைகள் 4 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதற்காக கரோனா ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
தமிழ்நாட்டு மீனவர்கள் 40 ஆண்டுகளில் 800 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஈழத் தமிழர்களோ, இனவெறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களோ அல்ல. தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலுக்குள் சென்றவர்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை மீறியவர்களும் அல்ல. இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளுடன் நேரடியாக மோதி தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
ஆனால் இதுபோன்ற பயங்கரவாதத்திற்கு எதிராக சிங்கள அரசிற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அப்பாவி தமிழர்களை சுட்டு கொன்றார்கள் என முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யவில்லை. சீனப்படையினருடனும், பாகிஸ்தான் படையினர் உடன் அடிக்கடி மோதிக்கொள்ளும் இந்திய கடற்படை, இலங்கை கடற்படையுடன் மோதி கொள்ளவில்லை என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.
இலங்கை அரசு எத்தனை மீனவர்களை கொன்றாலும், ஈழத்தமிழர்களை கொன்றாலும் அவர்களுடன் மோதுவது இல்லை என்ற வெளியுறவு கொள்கையை இந்திய அரசு கொண்டுள்ளது. பாகிஸ்தான், சீனாவை பகைத்துக்கொள்ளும் அளவிற்கு இலங்கையை பகைத்துக் கொள்ளாமல் நட்புறவுடன் இருக்கிறது. இலங்கை அரசால் இந்தியாவின் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எந்தவித பலனும் இல்லை. இலங்கை அரசு இந்தியாவின் பகை நாடுகளுடன் நட்புறவுடன்தான் இருக்கிறது.