சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரியில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ள இடம் தாமரைக்கேனி என்ற நீர்நிலை என தெரிவித்துள்ளது.
இந்த இடத்தை மேய்க்கால் புறம்போக்காக அறிவித்து காவல் நிலையம் கட்டியுள்ளதாகவும் இதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறவில்லை. எனவே, நீர்நிலையில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையத்துக்கு தடை விதிக்க வேண்டும். நீர்நிலையை பழைய நிலைக்கு மாற்றுமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர் ஆதாரமாக விளங்கும் இடத்தில் காவல் நிலையத்தை கட்டியுள்ளனர். எனவே, இதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பதாக உறுதிசெய்யப்பட்டால் அதை இடிக்க உத்தரவிடுவோம் என தெரிவித்தனர்.
மேலும் புதிய கட்டடத்தில் காவல் நிலையம் செயல்பட தடை விதித்தும் மேற்கொண்டு கூடுதலாக எந்த ஒரு கட்டுமான பணிகள் மேற்கொள்ள கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர். நீர்நிலையில் கட்டப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் குழு அமைக்க உரிய பெயர்களை பரிந்துரைக்குமாறு ஐஐடி இயக்குநருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.