சென்னை:பசுமைவழிச் சாலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ் நான் திமுகவுடன் தொடர்பில் இருப்பதாகவும் அதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் எனது மகன் பெயரில் 99 வருட குத்தகைக்கு பெட்ரோல் பங்க் எடுத்திருப்பதாக கோவை செல்வராஜ் கூறிய குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரம் இல்லாதது என மறுத்தார்.
அவர் ஓ.பன்னீர் செல்வம் தூண்டுதலின் பேரில் இந்த குற்றச்சாட்டை கூறியிருப்பதாகவும் அவர் வெறும் அம்புதான் எனவும் அம்பை எய்தவர் ஓ.பன்னீர் செல்வம் தான் என குற்றம் சாட்டினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் வருவாய் பெருக்கக் கூடிய வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திமுக ஆட்சியில் அமைச்சர் காந்தி முன்னிலையில் கூட்டுறவு சங்கம் மற்றும் ஐஓசி ஆகிய நிறுவனங்கள் 20 வருடம் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தெரிவித்தார்.
இது கூட தெரியாமல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை ஓ.பன்னீர் செல்வம் தூண்டுதலின் பேரில் கோவை செல்வராஜ் பேசி இருப்பதாக கூறியதாகவும் கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அவரது மகனை அம்பாக பயன்படுத்தி குற்றச்சாட்டு சுமத்துவதாகவும் மேலும் துணை முதலமைச்சர் ஆக இருந்தபோது அவருக்கு இது குறித்து தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.
திமுக அதிமுக இரண்டும் எதிரெதிர் துருவமுள்ள இரு கட்சிகளாக செயல்பட்டு வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் திமுக ஆட்சியை பாராட்டுவதும் மேலும் அதிமுகவின் மறைந்த பொதுச் செயலாளரான ஜெயலலிதா அவர்களின் எதிரியான கருணாநிதியின் பராசக்தி திரைப்படத்தில் பேசிய வசன புத்தகத்தை பொக்கிஷமாக பாதுகாப்பதாகவும் சட்டப்பேரவையில் தெரிவித்தார் என கூறினார்.
மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோதே கட்சி சார்பில் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண நிதி வழங்காமல் தனிப்பட்ட முறையில் நிதி வழங்குவதாக தெரிவித்தார். இதற்கு காரணம் முதலமைச்சரிடம் அவர் நற்பெயர் பெற வேண்டும் என்பதற்காக மட்டுமே என குற்றம் சாட்டினார். இது போன்ற காரணங்களால் கடந்த காலங்களில் ஓ.பன்னீர் செல்வம் உடன் தான் இணைந்து பயணித்தாலும் தற்போது ஓ.பன்னீர் செல்வத்தின் மேற்கண்ட செயல்கள் காரணமாக கருத்து வேறுபாடு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி முகாமிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
எடப்பாடி தலைமையில் கட்சி தலைமை வந்த பின்னர் ஓ.பன்னீர் செல்வம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கே.பி. முனுசாமி கட்சியில் ஜனநாயக ரீதியாக சர்வாதிகாரமாக செயல்பட்டவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இதன் பொருட்டு ஓ.பன்னீர் செல்வம் மீதும் கட்சி நடவடிக்கை எடுக்கும் என சூசகமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோடநாடு வழக்கு: தொழிலதிபர் செந்தில்குமாரிடம் மூன்றாவது நாளாக தொடர் விசாரணை!