சென்னை கெல்லீஸ் பகுதியில் கத்தி மற்றும் கஞ்சாவுடன் வந்ததாக தலைமைச்செயலக காலனி காவல் துறையினர், விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோரை கடந்த 18ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ் கடந்த 19ஆம் தேதி வலிப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து விக்னேஷின் இறப்பை மறைக்க காவல் துறை சார்பில் 1 லட்சம் ரூபாய் விக்னேஷ் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உயிரிழந்த விக்னேஷின் சகோதரர்களான வினோத் மற்றும் சூர்யா ஆகியோர் காவல் துறை தரப்பில் வழங்கப்பட்டதாக கூறப்படும் 1 லட்சம் ரூபாயை திரும்ப அளிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு இன்று காலை வந்தனர். அப்போது விசாரணைக்கு ஆஜராகும்போது சாட்சியங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி யஸ்வந்த் ராவ் விக்னேஷ் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் ப.பா. மோகன், “கடந்த 18ஆம் தேதி விக்னேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் கெல்லீஸ் சாலையில் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது காவல் ஆய்வாளர் மோகன் தாஸ் உள்ளிட்ட காவலர்கள் வழிமறித்து, அவர்கள் குடிபோதையில் இருந்த காரணத்தினால் காவலர்கள் விக்னேஷின் தலையில் தாக்கியதில் காவல் நிலையத்திலேயே இறந்துவிட்டார்.
அவருடன் கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது பொய்யான வழக்கைப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அடைத்துள்ளனர். விக்னேஷின் குடும்பத்தினரிடமும், நீதிபதியிடமும் இறந்த தகவலை கூறாமல் மறைத்தனர். இதுமட்டுமின்றி குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி ஆய்வாளர் மோகன்தாஸ் உள்ளிட்ட காவல் துறையினர் செயல்படாமல் சாட்சியங்களை அழிக்க விக்னேஷின் உடலை எரிப்பதற்கு முயன்றுள்ளனர்.