அஇஅதிமுகவின் பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் உடன் பிறந்த அண்ணன் ஜெயராமனின் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகிய இருவரை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 190 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது.
அத்துடன், சொத்தின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அவர்களது அத்தையான ஜெயலலிதாவின் பெயரில் அறக்கட்டளையாக தோற்றுவித்து அதன் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. மேலும், இருவரின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களின் சொந்த செலவில், தமிழ்நாடு அரசிடமிருந்து உரிய பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், “ தீபா, தீபக் ஆகிய இருவருக்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளது. அதற்கான முன்பணமாக 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர்கள் இருவருக்கும் கடிதம் அனுப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக இருவரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை” என தெரிவித்தார்.
அதற்கு தீபக் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “தீபக்கிற்கும், தீபாவுக்கும் காவல்துறை பாதுகாப்பு வேண்டுமா? என கேட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. அது குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும்” என பதிலளித்தார்.
பாதுகாப்பு வழங்கக்கோரிய விவகாரம் : தீபக், தீபா பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், “தீபா மற்றும் தீபக் இருவரும் பாதுகாப்பு வேண்டும் என்றால் கடிதத்துக்கு பதிலளிக்க வேண்டும். பாதுகாப்பு வேண்டாம் என்றால் நீதிமன்றத்தில் தெரிவித்துவிடலாம். இது தொடர்பாக தீபா மற்றும் தீபக் தரப்பில் டிசம்பர் 3ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” எனக் கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க :7.5% ஒதுக்கீட்டை எதிர்த்து அவசர வழக்கு! - நிராகரித்த நீதிபதிகள்!