சென்னை:காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் சுமார் 5.22 லட்சம் ஏக்கரில் 'குறுவை நெல் சாகுபடி' நடைபெறும். அதன்படி இந்த ஆண்டும், ஜூன் மாதத்தில் காவிரி நீரை நம்பி டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். அதன்படி, வேதாரண்யத்தில் 6 ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில் 93 ஆயிரம் ஏக்கர்களில் குறுவை நெல் விதைக்கப்பட்டது. நடப்பாண்டில் காவிரி டெல்டா பகுதிகளில் மொத்தம் 3.5 லட்சம் ஏக்கருக்கும் மேல் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
கடந்த ஜூன் 12ஆம் தேதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு முறையாக திறந்து விடவில்லை. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்டது. பாசனத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல், காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் கூறும்போது, "ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது, அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த தண்ணீர் தற்போது 54 அடியாக குறைந்துள்ளது. தண்ணீர் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு முழுமையாக சென்றடையவில்லை. இதனால், குறுவை சாகுபடியில் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்களும், நடவு செய்த நெற்பயிர்களும் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. நேரடி விதைப்பில், தற்போது 50,000 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்டா விவசாயிகள் முழுமையாக காவிரி நீரைத்தான் நம்பி உள்ளனர். தற்போது தண்ணீர் இல்லாததால், நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, கீழ்வேளூர், கீழையூர், வேதாரண்யம் ஒன்றிய பகுதிகளில் நேரடி விதைப்பு மூலம் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முற்றிலும் காய்ந்துவிட்டன. அதேபோல் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஆகிய பகுதிகளிலும் நெற்பயிர்கள் காய்ந்து கருகிவிட்டன. சுமார் 60 நாட்களுக்கு மேல் சென்றுவிட்டது; இனிமேல் தண்ணீர் சென்றாலும் பயிர்களுக்கு பயன் இல்லை. இதனால் விவாசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சியும், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சியும், ஆகஸ்ட் மாதத்தில் 45 டி.எம்.சியும் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு முழுமையாக தண்ணீரை வழங்கவில்லை, 37 டிஎம்சி பாக்கி இருக்கிறது. அதை வழங்கி இருந்தால் தமிழக விவாசாயிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. கர்நாடகவில் 90 சதவீதம் தண்ணீர் இருக்கிறது. ஆனால், ஒரு நாளைக்கு 24,000 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு தேவை. கர்நாடகா பெயர் அளவுக்கே தண்ணீர் திறந்து விடுகிறார்கள். தண்ணீர் வந்தால்தான், அடுத்த பருவமான சம்பாவிற்கு உதவியாக இருக்கும்" என்றார்.
நாகை மாவட்ட விவசாயிகள் கூறுகையில், "டெல்டா மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளில் இந்த ஆண்டில் 14,190 ஏக்கா் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடைமடை, தலைமடை என மொத்தமாக சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாததால் தற்போது குறுவை சாகுபடி முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. தலைமடையான தஞ்சை மாவட்டத்தில் பூதலிரூரில்கூட தற்போது பயிர் காய்ந்து வருகிறது. குறுவையை பொறுத்தவரை நேரடி விதைப்பு என்றால் ஏக்கருக்கு 12 ஆயிரம் ரூபாயும், நடவு என்றால் 15 ஆயிரம் ரூபாயும் செலவாகிறது. தற்போது வயல் முழுவதும் காய்ந்து விட்டது. காவிரி நீரை நம்பிய எங்களுக்கு மிஞ்சியது கண்ணீர்தான். இதற்கு மேல் காவிரியில் தண்ணீர் வந்தாலும், மழை பெய்தாலும் பயன் இல்லை" என்றனர்.