சென்னை புதுப்பேட்டை நரியங்காடு காவலர் குடியிருப்பில் புதிதாக ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்கள் அமல்ராஜ், தினகரன், காவல் துறையினரின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
சிறுவர் பூங்காவை திறந்துவைத்த பிறகு குழந்தைகளுடன் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கலந்துரையாடினார். இதையடுத்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சென்னை காவல் துறையினர் கரோனா காலத்தில் அவர்களுடைய பாதுகாப்பை பார்க்காமல் நேர்மையாகப் பணியாற்றிவருகின்றனர். கரோனா காலத்தில் பணிபுரிந்து காவல் துறையினரின் குடும்பத்தினருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
காவல் துறையினரின் மகன்கள், மகள்களுக்கு கல்லூரியில் சேர்ப்பதற்காகவும் உதவிகள் செய்துவருகிறோம். 126 பேருக்கு அவர்கள் விரும்பும் கல்லூரியிலேயே இடம் வாங்கி கொடுத்துள்ளோம். சென்னையில் உள்ள காவலர்கள் குடியிருப்பில் உள்ள குறைகளை களைய அங்கேயே கமிட்டி ஒன்று அமைத்து தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.