சென்னை : டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அனைத்து மாநில முதலமைச்சர்களிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டி வருகிறார்.
முன்னதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மகாராஷ்டிரா சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிராஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தெலங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூசி உள்ளிட்டோரை அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த மான் ஆகியோர் சந்தித்து மத்திய அரசு கொண்டு வந்த டெல்லி அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். டெல்லி அவசரச் சட்டம் குறித்து இரு தரப்பும் தீவிர ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் செய்தியாளர்களை மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், கெஜ்ரிவாலுடனான சந்திப்பு கடந்த வாரமே நடந்திருக்க வேண்டும் என கூறினார். தனது வெளிநாட்டு பயணத்தின் காரணமாக சந்திப்பு தாமதமாகியதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது ஆக்கபூர்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.