சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வெளி கொண்டுவரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் பல லட்சம் ரூபாய் பணம், முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருக்கக்கூடிய 8 கணினிகளின் ஹார்ட் டிஸ்க்குகள் அழிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அந்த கணினியில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்கள் மற்றும் சீரமைப்பு செய்யப்பட்ட கட்டட விவரங்கள் எனப் பல முக்கிய கோப்புகள் இருந்துள்ளன.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணையில் இணை தலைமை பொறியாளர் மற்றும் கண்காணிப்பு பொறியாளர் ஆகியோர் கோப்புகளை அழித்ததாகக் கூறப்படுகிறது.