சென்னை: இந்து அறநிலையத் துறையின் கீழ் ஈஷா யோகா மையத்தை கொண்டுவரவேண்டும் என்று தெய்வத் தமிழ் பேரவை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. சில மாதங்களாக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் 'கோயில் அடிமை நிறுத்து' என்ற இயக்கத்தை ஆரம்பித்து, இந்து அறநிலையத் துறையில் இருந்து தமிழ்நாடு கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.
இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்வினை ஆற்றி வரும் நிலையில், தெய்வத் தமிழ்ப் பேரவை எனும் இயக்கத்தின் சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன், பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று (ஏப்.13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்:
"கோயில்களை ஜக்கி வாசுதேவ் முழுமையாக கைப்பற்ற நினைக்கிறார். இந்து அறநிலையத் துறையினை கலைப்பதற்காக ஈஷா யோகா மைய குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக, காவிரி தண்ணீரை கர்நாடக மாநிலம் நமக்கு தர வேண்டுமெனவும், தற்போது மரத்தை நடுங்கள் மழை வரும் என்று கூறி நமது உரிமையை திசை திருப்பினார் ஜக்கி.
ஈஷா யோகா மையம் தனது ஆன்மிக போர்வையின் கீழ் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்காக வேலை செய்கிறது. அந்த போர்வையை எடுக்காவிட்டால் அதுவும் ஓர் ஆன்மீகத்தலமாக மாறிவிடும் என்பதால் ஈஷா யோகா மையத்தையும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். அறநிலையத்துறையின் கீழ் உள்ள தமிழ்நாட்டு கோவில்களில் தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, "ஜக்கி 109 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தமிழ்நாடு அரசே தெரிவித்துள்ளது. பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஈஷா மையத்தை அரசுடமையாக்க வேண்டும். தமிழ்நாட்டு கோவில்களின் குறைகளை நீக்க ஆன்மீக உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும். மேலும் சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டுவோருக்கு மட்டுமே அர்ச்சனைச் செய்யவேண்டும், மற்றபடி தமிழில் மட்டுமே அர்ச்சனை செய்யப்படவேண்டும். அர்ச்சகராக அனைத்து சாதியினரும் தகுதி உடையவர்கள் தான். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே மாதம் 8ஆம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம்.
தெய்வத் தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் செய்தியாளர் சந்திப்பு எங்கள் இயக்கமானது நோய்க்கு மருந்து கொடுக்க நினைக்கிறது, ஆனால் ஜக்கி வாசுதேவ் கொலை செய்ய சொல்கிறார். தமிழ்நாட்டின் யோகி ஆதித்யநாதாக மாற நினைக்கிறார் ஜக்கி வாசுதேவ். அதற்காக பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறார். உருவவழிபாடு இல்லாதவர்கள் எப்படி ஆகமத்தை வளர்க்க முடியும், அவர்களுக்கு எப்படி ஆகம வழியென்ற ஒன்று இருந்திருக்க முடியும்.
மற்ற மதங்களுக்கு எல்லாம் ஒரே கடவுள், அதற்கு என ஒரே புனித நூல் உள்ளது. ஆனால் இந்து மதத்தில் ஒரே கடவுள், ஒரே புனித நூல் என்ற கூற்றே கிடையாது. ஆகையால் இந்து அறநிலையத்துறையின் கீழ் பொதுவாக செயல்பட்டால் மட்டுமே கோவில்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். போலியான விளம்பரங்களின் மூலம் ஆன்மீகத்தை வியாபாரமாக கொண்டிருக்கிறிருக்கும் ஜக்கி, மீண்டும் நம்மை வர்ணாசிரமத்தின் கீழ் கொண்டு கொண்டுவர துடிக்கிறார்" என்று குற்றஞ்சாட்டினார்.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள சைவ நெறிக்கு புறம்பான செயல்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, ஆக்கிரமிப்பு புகாரின் பேரில் ஈஷா மையத்தை அரசு கைப்பற்றலாம் எனவும் தமிழ்நாடு ஒரு போதும் அவர்களுக்கு அடிபணியாது, ஜக்கி அவரின் கூற்றுக்கு விரைவில் வருத்தப்படுவார் எனவும் பெ.மணியரசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை மீது கருப்பு சாயம்!