சென்னை:பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு சாதனை பொதுக்கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தமிழகம் உற்சாகம் மிகுந்த பண்பாடு கலந்த நகரமாகும். ராஜராஜ சோழன்,ராஜேந்திர சோழன் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகள் ஆண்ட நகரம். அவர்கள் படைகளையாளும் திறமைகளில் யுக்தி பெற்றவர்கள். அவர்கள் பிறந்த பூமியில் நான் தற்போது இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். திருவள்ளுவர் போன்று பல கவிஞர்களையும், கலைஞர்களையும் கொண்டது தமிழ்நாடு.
‘தமிழ்மொழி எங்கள் உயிர்மொழி’ - அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்: தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. தமிழ் மொழி மிகவும் அழகான மொழி மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பிறப்பு மொழியாகவும், பிற மொழிகளுக்கு உருவாக்க மொழியாகவும் இருந்து வருகிறது. மேலும் சித்தர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த இந்த புண்ணிய பூமிக்கு வருகை தந்ததைப் பெருமையாகக் கொள்கிறேன். திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த தமிழகத்திற்கு நான் தற்போது வந்திருக்கிறேன். திருக்குறள் நூல் மட்டுமல்ல, இந்திய அரசியலில் மிக முக்கியமான முடிவுகளை மோடி எடுப்பதற்குத் திருக்குறள் வழிவகை வகிக்கிறது. நான் மிக தொன்மை மொழியான தமிழ் மொழி பேசத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்குத் தமிழ் மொழி தெரியாததால் எனது தாய் மொழியான இந்தியில் பேசுகிறேன். அதனை மொழி பயிற்சி செய்து வருவார்கள்” எனத் தமிழ் மொழியின் பெருமை குறித்தும் அதன் தொன்மைக் குறித்தும் பேசினார்.
மத்தியில் நிலைநிற்கும் தமிழகத்தின் செங்கோல்:தொடர்ந்து பேசிய அவர், “பழமையான செங்கோல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தெரிந்திருந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், இந்தியா முழுவதுமே செங்கோல் உடைய பெருமை தெரியவந்துள்ளது. செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய போது புதிய வரலாறு இந்தியாவில் உருவாகியுள்ளது. தமிழகத்தின் பெருமையை ஜனநாயகம் மன்றத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் நிறுவிய நமது பிரதமருக்கு நன்றியைத் தெரிவிக்கக் கைதட்டி பாராட்டுகளையும் நன்றிகளையும் வெளிப்படுத்துவோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில், ஆரம்பத்தில் மந்தமான வளர்ச்சி குறைவான வளர்ச்சி மட்டுமே நம்மிடம் இருந்தது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவிற்கு உலக அளவில் மிகப் பெரிய உயரமும் மதிப்பும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இந்தியா என்ன சொல்லுமோ என்று உலக நாடுகள் அனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவின் குரலுக்கு உயர்வு மதிப்பும் கொடுத்து வருகிறது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது - இந்தியா கண்ட வளர்ச்சிப் பாதை:இந்தியா எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திலும் போர் தொடராது. ஆனால் இந்தியாவை எந்த நாடு சீண்டினாலும் நாம் சும்மா விட மாட்டோம். உலக பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மற்ற நாடுகளைக் குறிப்பிடும் போது இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும். கடந்த 2015-16 தனிநபர் வருமானம் எந்த அளவுக்கு இருந்ததோ அதனை விட தற்போது 2022 - 23 ஆண்டுகளில் அந்த வளர்ச்சி பன்மடங்காக உயர்ந்துள்ளது. சீனாவைத் தாண்டி இந்தியா அதிகமான செல்போன்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். முன்பு வெறும் இறக்குமதி செய்யும் நாடாகத்தான் இந்தியா இருந்தது. தற்போது ராணுவ தடவாளங்களை போன்ற பல்வேறு பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடக இந்தியா உருவெடுத்துள்ளது.
மொத்த ஆயுதங்களும் இந்தியர்களால் இந்தியாவுக்குத் தயார் செய்வதோடு மட்டுமல்லாமல் உலகம் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். ராஜீவ் காந்தி கூறும்போது, மக்களுக்காக 100 ரூபாய் கொடுத்தால் அதில் 15 ரூபாய் தான் மக்களிடம் போய்ச் சேர்வதாகக் கவலை அடைந்தார். ஆனால் தற்போது பிரதமர் மோடி மக்களுக்காக 100 ரூபாய் கொடுக்கும் போது, அந்த முழு பணம் மக்களிடையே போய் சென்று அடைகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. செயல்களில், செயல் வடிவில் செய்து காட்ட வேண்டும். அப்போது தான் இப்படியான செயல்களை ஒழிக்க முடியும். தமிழகத்தில் எந்த அளவுக்கு ஊழல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்தியா முழுவதும் தெரிகிறது. ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க மக்கள் பாஜகவுக்கு ஒருமுறை வாய்ப்பு தரவேண்டும்.
வள்ளரசு நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் இந்தியா:பாஜக ஆட்சியில் ஊழல் செய்பவர்கள் அரசு பதவியில் இருக்க மாட்டார்கள் சிறையில் தான் இருப்பார்கள். சுதந்திரம் பெறப்பட்ட நாட்களில் காங்கிரஸ் தான் ஆட்சியிலிருந்தது. சுதந்திரம் அடைந்தபோது 74 விமான நிலையங்கள் தான் இந்தியாவிலிருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக 74 விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களுக்கு உதாரணமாக ஜப்பான் தான் சொல்லுவார்கள். தற்போது இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் சேவை ஜப்பானையே பின்னுக்கு தள்ளி உள்ளது. நாட்டில் 10 லட்சம் மக்கள் பிரதமர் காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு முன்பு 14 எய்ம்ஸ் மருத்துவமனை தான் இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.
கரோனா காலத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, இரண்டு தடுப்பு ஊசிகளை இலவசமாகப் போட்டவர் மோடி. 120 வெளிநாடுகளுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு மனித குலத்தைக் காத்தவர் மோடி. பாரதிய ஜனதா கட்சி அரசு அமைப்பதற்காக அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு சாசனத்தை உற்பத்தி செய்யப் பல நிறுவனத்தை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒரு பெருமைக்குரிய மாநிலமாக உள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. அதனால்தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் தொடங்கினாலும், மோடி தொடங்கி வைக்கிறார்.