தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: செப். 17இல் முக்கிய உத்தரவு - Defamation case against Chief Minister Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 16 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு
முதலமைச்சர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு

By

Published : Sep 3, 2021, 6:23 PM IST

சென்னை: 2011 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு, வாக்கி-டாக்கி கொள்முதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அப்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

16 குற்றவியல் அவதூறு வழக்குகள்

அரசுக்கு எதிராகவும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறியதாக 16 குற்றவியல் அவதூறு வழக்குகள் தமிழ்நாடு அரசு சார்பில் அப்போதைய ஸ்டாலின் மீது தொடரப்பட்டன.

இந்த நிலையில் அண்மையில் பொறுப்பேற்ற திமுக அரசு, கடந்த ஆட்சியில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்து அரசாணை பிறப்பித்தது.

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளைத் திரும்பப் பெரும் முன்னர் சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

செப். 17ஆம் தேதி உத்தரவு

அந்த உத்தரவின் அடிப்படையில் ஸ்டாலினுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளைத் திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று (செப்டம்பர் 3) விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலினுக்கு எதிராக நிலுவையில் உள்ள 16 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதிப்பது தொடர்பான மனு மீது வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்து வழக்கை நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் 2022; ஷிரோமணி அகாலிதளம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details