சென்னை:காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு - கர்நாடக அரசுக்கும் இடையே பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் நாளை (அக்.09) காலை 10 மணிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை கூடுகிறது. இதில் காவிரி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அனைத்துக் கட்சி கூட்டத்தை கருத்துகளைக் கேட்டு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பேசபட்ட நிலையில் நாளை கூடவுள்ள சட்டபேரவைக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நாளை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சட்டபேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.மேலும், நாளை மாலை நடைபெறும் அலுவல ஆய்வு கூட்டத்தில் பேரவை எத்தனை நாள்கள் நடைபெறும் என முடிவெடுக்கபடும். குறிப்பாக நாளை முதல் நாள் கூட்டத்தொடரில் 2023-24ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யபடவுள்ளது.
மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நடத்திய போராட்டம், ஆசிரியர்களை இரவோடு இரவாக கைது செய்து அப்புறபடுத்தியது, காவிரி நதிநீர் விவகாரத்தில் தற்போது வரை அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாமலிருப்பது, தமிழ்நாட்டில் பரவி வரும் டெங்கு காய்ச்சலுக்கு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறவிட்டது போன்ற பல்வேறு பிரச்னைகளை அதிமுக தரப்பில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளது.