தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பை கிடங்குகளில் இருந்து மீண்டு எழுமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்?

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிக்கரணை சதுப்புநில காடுகள் தற்பொழுது குப்பை மேடாக மாறியுள்ளது, இதிலிருந்து மீண்டு பள்ளிக்கரணை சதுப்புநிலம் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புமா எனக் கேள்வி எழுந்துள்ளது.

குப்பை கிடங்குகளில் இருந்து மீண்டு எழுமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்
குப்பை கிடங்குகளில் இருந்து மீண்டு எழுமா பள்ளிக்கரணை சதுப்புநிலம்

By

Published : May 27, 2022, 10:55 PM IST

சென்னை:பள்ளிக்கரணை சதுப்புநிலம் 50 ஆண்டுக்கு முன் 6 ஆயிரம் ஹெக்டேராக இருந்ததாகவும் ஆக்கிரமிப்பு காரணத்தினால் தற்போது அது 700 ஹெக்டேராக குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சதுப்புநிலத்தில் மொத்தம் 625க்கும் மேற்பட்ட வகை வகையான உயிரினங்களும் ஏறத்தாழ 2 லட்சத்து 65 ஆயிரத்து 313 பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு சிறப்பு உடைய இந்த சதுப்பு நிலத்தில் ஐடி நிறுவனத்தின் கழிவுகள், அடுக்குமாடி குடியிருப்பு கழிவுகள் என பல்வேறு விதமான கழிவுகள் இதில் கலக்கப்படுகிறது. இதனால் பள்ளிக்கரணை சதுப்புநிலம் பறவைகள் மற்றும் உயிரினங்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறது.

குப்பை கிடங்கு

இது ஒரு புறம் இருக்க பெருங்குடி பகுதியில் இருக்கும் கிட்டத்தட்ட 250 ஏக்கர் சதுப்புநிலத்தை குப்பைக்கிடங்கு ஆக்கிரமித்துள்ளது. தினமும் இங்கு சுமார் 2500 டன் குப்பைகள் கொட்டப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் குப்பை மலை போல் குவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு இருக்கும் பறவை மற்றும் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளது.

குப்பை கிடங்கு

மாநகராட்சி நடவடிக்கை:மாநகராட்சி இந்த மலைபோல் இருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு, கிடங்கை 6 பகுதியாக பிரித்து, 3 பகுதிகளை ஜிக்மா(zigma) என்ற நிறுவனத்திடமும் மீதமுள்ள 3 பகுதிகளை வி ஸ்டார்ட் (we start) என்ற நிறுவனத்திடமும் வழங்கி உள்ளது. அங்கு மலை போல் இருக்கும் குப்பைகளை பெரிய இயந்திரம் கொண்டு தரம் பிரித்து தரைமட்ட அளவிற்கு கொண்டு வருவதே இந்த நிறுவனங்களின் முக்கியமான நோக்கமாகும்.

குப்பை கிடங்கு

இந்த குப்பை தரம் பிரிக்கும் செயல்முறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கபட்டது 3 ஆண்டுகளுக்குள் முடிக்கவேண்டும் என மாநகராட்சி அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தரைமட்ட அளவிற்கு கொண்டு வந்த பிறகு மீண்டும் சதுப்புநிலமாக மாற்றுவது மாநகராட்சியின் நோக்கம் எனவும் கூறப்படுகிரது.

ஒட்டுமொத்தமாக மீட்க வேண்டும்: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்பது குறித்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் "சதுப்பு நில பகுதிக்கு அருகில் உள்ள குப்பை கிடங்கை அகற்றி, சீரமைக்கும் பணி முதல்கட்டமாக மேற்கொள்ளப்படும். 7000 ஹெக்டேர் நிலம் உள்ள பள்ளிக்கரணை தற்போது 640 ஹெக்டேராக உள்ளது.

குப்பை கிடங்கு

இங்குள்ள குப்பை கிடங்கு அகற்றப்பட்டு வனமாக மாற்ற திட்டம் மேற்கொண்டு வருகிறோம். முதல்கட்டமாக குப்பை அகற்றும் பணி நடந்து வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒட்டுமொத்தமாக மீட்டெடுக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.

வாய் மொழியாக சொன்னால் போதாது: குப்பை அனைத்தும் தரைமட்டத்திற்கு கொண்டு வந்தாலும் பிளாஸ்டிக், கற்கள், கண்ணாடி என பல வகையான குப்பைகள் தரைக்கு அடியில் இருக்கும் இப்படி இருக்கும் நிலையில் அந்த நிலம் எவ்வாறு மீண்டும் சதுப்பு நிலமாக மாறும் என்ற கேள்வி எழுகிறது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த ஜெயராமனிடம் பேசிய போது, "சதுப்பு நிலமாக மாற்றுவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இது பல லட்சம் ஆண்டுகளாக உருவானது. மீண்டும் சதுப்புநிலம் கொண்டுவரப்படும் என்று வாய் மொழியாக மட்டும் சொல்லி விட்டால் போதாது, சதுப்பு நிலமாக மாற்ற வேண்டுமென்றால் அரசு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.

சதுப்பு நிலத்திற்கு உப்புத்தண்ணி மற்றும் நல்ல தண்ணீர் இரண்டும் கலந்து இருக்க வேண்டும். ஆனால் தற்போது அனைத்து இடங்களிலும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது, பிறகு எப்படி மீண்டும் சதுப்பு நிலமாக மாற சாத்தியமுள்ளது? சதுப்பு நிலமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே உள்ளது" எனத் தெரிவித்தார்.

எனவே, பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக பராமரிக்கவேண்டும் என்பதே மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க:சென்னை - பெங்களூரு அதிவிரைவு சாலைத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்!

ABOUT THE AUTHOR

...view details