தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளா போல தமிழகத்தில் ஒரு சம்பவம்; காதலனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தது காதலியா? - குளிர்பானத்தில் எலி மருந்து

பிறந்தநாளை காதலியுடன் கொண்டாடுவதற்காக திருப்பூரில் இருந்து சென்னை வந்த இளைஞருக்கு கோயம்பேட்டில் வைத்து எலி மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்ததாக காதலன் மரண வாக்குமூலம் அளித்த நிலையில், வழக்கை விசாரித்தபோது காதலனே கடையில் இருந்து குளிர்பானம் வாங்கியது தெரியவந்துள்ளது. இதனால் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

death of the boyfriend he told that his girlfriend mixed rat poison in the soft drink the investigation revealed the boyfriend bought the soft drink from the store
காதலி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து தந்தததாக கூறிய காதலன் உயிர் இழந்த வழக்கில் காதலனே கடையில் குளிர்பானம் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது

By

Published : Apr 16, 2023, 1:30 PM IST

Updated : Apr 16, 2023, 2:16 PM IST

காதலி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து தந்தததாக கூறிய காதலன் உயிர் இழந்த வழக்கில் காதலனே கடையில் குளிர்பானம் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது

சென்னை: கேரளாவில் கல்லூரி மாணவி கிரிஷ்மா தனது காதலன் ஷாரோன் ராஜை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வந்தார். சஞ்ஜீவ் குமார் தனது பிறந்த நாளை சென்னை சூளைமேட்டில் உள்ள தனது காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த 7ஆம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார்.

சென்னையில் பார்க், பீச் என பல்வேறு இடங்களுக்கு சுற்றிவிட்டு 7ஆம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக காதலியுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது இரவு 10 மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில், 16 வயது காதலியுடன் சஞ்ஜீவ் குமார் இருக்கும் போது, குளிர்பானம் ஒன்றை சிறுமி சஞ்ஜீவ் குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதை குடித்த பின்னர் சிறுமி அழுதுகொண்டே, "என்னை மன்னித்துவிடு. உன்னை பழி வாங்குவதற்காகவே உன்னை வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்திருப்பதாக’’ சிறுமி சஞ்ஜீவ் குமாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமி இரவு 10 மணி ஆகியும் வீட்டிற்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, சிறுமி கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி இருவரும் நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து சஞ்ஜீவ் குமாரை கடுமையாக தாக்கி, அவரது செல்போனையும் உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த சஞ்ஜீவ் குமார் எங்கே செல்வது என்று தெரியாமல் இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கி விட்டு, மறுநாள் விடியற்காலை ஆவடியில் உள்ள தன்னுடைய மாமா செல்வராஜ் வீட்டிற்கு பேருந்து மூலமாக சென்றுள்ளார். அங்கு சென்ற சஞ்ஜீவ் தனது காதலி குளிர்பானத்தில் கலந்து கொடுத்த விஷத்தை குடித்துவிட்டதாக கூறியதால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சஞ்ஜீவ் குமாரின் உடல்நிலை மோசம் அடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சையில் இருந்த போது தன்னுடைய காதலி குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்துவிட்டதாகக் கூறி சஞ்ஜீவ் காவல்துறையிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார்.

இதன் பின்னர் சஞ்ஜீவ் குமாரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்துக் கொள்வதாக கூறி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து, நேற்று அவரை உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே சஞ்ஜீவ் குமார் உயிர் இழந்ததால், உடலானது அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்துள்ளன.

இதனிடையே கோயம்பேடு போலீசாருக்கு சஞ்ஜீவ் குமாரின் உறவினர் செல்போன் மூலமாக நடந்த விவரத்தை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். அப்போது பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமல் இறுதிச்சடங்கு நடத்தக்கூடாது என்று கூறி உடனே பரமக்குடி போலீசாருக்கு கோயம்பேடு போலீசார் தகவல் தெரிவித்தன் அடிப்படையில், சஞ்ஜீவ் குமாரின் உடலை பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி போலீசார் கொண்டு சென்றுள்ளனர்.

இதனிடையே கோயம்பேடு போலீசார் கொலை, கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இறந்த சஞ்ஜீவ் குமார் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

கடந்தாண்டு சிறுமியின் பெற்றோருக்கு இந்த விவகாரம் தெரியவந்ததையடுத்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சஞ்ஜீவ் குமாரை (தற்போது இவருக்கு 18 வயது ஆகிவிட்டது) போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். பின்னர் வெளியே வந்தும் அடிக்கடி சிறுமியிடம் தொலைபேசி மூலமாக சஞ்ஜீவ் குமார் பேசி வந்ததும் தெரிய வந்ததும், கடந்த 7 ஆம் தேதி சென்னை வந்த சஞ்ஜீவ் குமார் சிறுமியுடன் காலையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்த போது, சஞ்ஜீவ் குமார் தான் குளிர்பான பாட்டிலை கடையிலிருந்து வாங்கி வருவதும், உடன் சிறுமி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமி கோயம்பேட்டில் இருக்கும் தகவலை தெரிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி இருவரும் வந்து கோயம்பேட்டில் சஞ்ஜீவ் குமாரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சிறுமியை அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே அண்ணா நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருப்பதால் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் சஞ்ஜீவ் குமார் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து அவரே குடித்திருக்கிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மனைவியை கொலை செய்த கணவன்; பழிவாங்க உறவினர்கள் செய்த காரியம்!

Last Updated : Apr 16, 2023, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details