சென்னை:வியாசர்பாடி எம்.எம். கார்டன் பகுதியைச்சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி என்பவரின் மகள் பிரியா (17). ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததுடன் கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்ட பிரியாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர், மருத்துவர்களிடம் சிகிச்சைப்பெற்று பிரியா தொடர்ந்து கால்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற பிரியாவுக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 28ஆம் தேதி பிரியா, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் பிரியாவுக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதையடுத்து, மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மாணவி பிரியாவுக்கு முட்டியில் சவ்வு அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் பிரியாவின் உடல் நிலை மோசமடைந்ததால் கடந்த 8ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பிரியாவுக்கு காலில் ரத்தம் ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் திடீரென நேற்று மாணவி பிரியாவின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், பிரியா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை கால்பந்தாட்ட வீராங்கனையான மாணவி பிரியா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.