சென்னை:கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17-லிருந்து 28 சதவீதமாகவும், ஓய்வூதியத்தை 28 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. அதனடிப்படையில், 2022ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து தமிழக அரசு சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கு அதே அளவு உயர்த்தி அறிவித்தது.
இந்த உயர்வை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில், 2002ஆம் ஆண்டில் பிறப்பித்த அரசாணையின்படி அரசு ஊழியர்களுக்கான நலத் திட்டத்தை நஷ்டத்தில் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அமல்படுத்த வேண்டாம் என்றும், ஒருவேளை வழங்குவதாக இருந்தால், அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.