சென்னை: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது. அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்த அகவிலைப்படியானது கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆறு மாதங்கள் கழித்து ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருப்பது ஏமாற்றத்தை தருகிறது.
கரோனா நோய்த் தாக்குதல் காலத்தில் 21 மாத அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. கடந்த முறை 6 மாத அகவிலைப்படி வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், தற்போது மேலும் 6 மாத காலத்திற்கான அகவிலைப்படியை வழங்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது. உடனடியாக, தமிழ்நாடு அரசு விடுபட்ட அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வேண்டும்.
மேலும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே 6ஆவது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை கலைவதற்காக ராஜூவ் ரஞ்சன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணன் தலைமையில் நிதித்துறை அதிகாரிகள் பத்மநாபன், உமாநாத் ஆகிய மூவர் குழு அமைக்கப்பட்டது.
அதன் பிறகு 7ஆவது ஊதியக்குழு தொடர்பான குறைபாடுகளை நீக்க சித்திக் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. மேலும் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் பணீந்தரரெட்டி , ராதாகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டது. இதுவரை நான்கு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டும் ஊதியம் தொடர்பான கோரிக்கைகள் நிலுவையில் இருந்தபடியே உள்ளது. தற்போது 5ஆவதாக ஒரு குழு அமைப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இக்குழு விசாரணை அறிக்கை வழங்குவதற்கு காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்படி அடுக்கடுக்கான குழுக்களால் பலனேதும் விளைந்து விடுமா? என்ற கேள்விக்குறி எழுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பான நியாயத்தை முதலமைச்சர் முழுமையாக உணர்ந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான், இந்த கோரிக்கைகளை ஆதரித்து பலமுறை பேசினார்.
இதன் நியாயத்தை உணர்ந்து தங்களது தேர்தல் அறிக்கையிலும் இணைத்துக் கொண்டார். கோரிக்கையில் உள்ள நியாயம் வெளிப்படையாக தெரிந்த நிலையில், குழு அமைப்பது தேவையற்ற காலதாமதத்தை மட்டுமே ஏற்படுத்தும். அதனால், ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் சங்கத்தின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இதுவே கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான நிரந்தரமான எளிய வழியாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம் ? - ஓபிஎஸ் கேள்வி