சென்னை:சென்னை மருத்துவக் கல்லூரியின் பட்டமேற்படிப்பு மாணவர் மருதுபாண்டியன் இறந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், 36 மணி நேரம் பணியில் இருந்ததால் உயிரிழந்தார் எனக் கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன் கூறும்போது, “மருத்துவர் மருது பாண்டியன் (30), சென்னை மருத்துவக் கல்லூரியில் பொது அறுவையியல் பட்டமேற்படிப்பு (M.S. 2019 - 2022) படித்தார். அதில் தேர்ச்சி பெற்ற பின், சென்னை மருத்துவக் கல்லூரியிலேயே பொது அறுவையியல் துறையில் உதவி அறுவை சிகிச்சைப் பேராசிரியராக (21.6.2022 முதல் 27.11.2022) பணியாற்றினார்.
பின்னர், உயர் சிறப்பு அறுவையியல் படிப்புகளுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 27.11.2023 அன்று சென்னை மருத்துவக் கல்லூாயில், குடல் - இரைப்பை அறுவை சிகிச்சைத் துறையில், M.ch (எம்.சி.ஹெச்) உயர் பட்டப் படிப்பு மாணவராகச் சேர்ந்தார். துறைக்குப் புதிய மாணவரானதால், துறையின் வழக்கப்படி துறை சார்ந்த பணிகள் பற்றி அறிமுகம் ஆவதற்காக, மருத்துவர் மருது பாண்டியன் ஒரு பார்வையாளராகத் தான் நடத்தப்பட்டார்.
இதனிடையே, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 8.12.2023 அன்று மூளைச் சாவு ஏற்பட்ட நபரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல், ஒரு கல்லீரல் செயலிழப்பு நோயாளிக்குப் பொருத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யப்படும் முறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தில், மருத்துவர் மருது பாண்டியன் தானாகவே அறுவை அரங்கத்திற்கு வந்து அறுவை சிகிச்சைப் பார்வையாளராக இருந்தார்.
எனவே அறுவை சிகிச்சையிலோ, சிகிச்சைக்குப் பின் நோயாளியின் கண்காணிப்பிலோ, அவருக்கு எந்தவித பொறுப்பும் வழங்கப்படவில்லை. அவரது அகால மரணம் சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவர்கள் மற்றும் நிர்வாகத்தினரைத் துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறப்பிற்கான காரணம் முறையான உறுப்புப் பரிசோதனைகள் முடிந்த பின்னர் தான் தெரியவரும்.
பணிச் சுமையால் அவர் இறந்து விட்டார் என்ற கருத்தும், தொடர்ந்து 36 மணிநேரம் பணியில் இருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை உறுதியாகக் கூறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக சமத்துவ மருத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறுகையில், “மருதுபாண்டியன் என்ற 30 வயதேயான இளம் மருத்துவர், இரைப்பை குடல் அறுவை சிகிச்சைத் துறையில், சென்னை மருத்துவக் கல்லூரியிலும், அதனுடன் இணைந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் பயின்று வந்தார்.