சென்னை: தமிழகத்தில் டிடி பொதிகை என்னும் சேனல் உள்ளது. அதை வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகவும், தூர்தர்ஷனில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தி உள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் விவாதங்களை நடுநிலையாக நடத்துவதாகவும், விரைவில் தூர்தர்ஷன் நிருபர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் நீட் தேர்வு குறித்து கேள்விகளை எழுப்ப தயாராகி வருவதாகவும் கூறினார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகையில், “தமிழ்நாடு மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு லட்சம் மீனவர்களுக்கு அதிநவீன டிரான்ஸ்பரண்ட் கருவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை, மாநில அரசுகள்தான் செயல்படுத்தும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை, தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும். திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், நவம்பர் 15ஆம் தேதி ‘நமது லட்சியம், வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற ரத யாத்திரை நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. இதை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
யாத்திரையின்போது, ஆயுஷ்மான் பாரத் மற்றும் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பு, ஆதார் சரிபார்ப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும். விவசாயத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த யாத்திரை, நாடுமுழுவதும் 2.5 லட்சம் கிராமங்களிலும், 18 ஆயிரம் நகரப்புற பகுதிகளில் நடைபெறும்.
மேலும், தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 500 கிராமங்களிலும், ஆயிரத்து 455 நகர்ப்புற பகுதிகளிலும் நடைபெறும். முதலாவதாக, நவம்பர் 15ஆம் தேதி சேலம், திருவண்ணாமலை, நீலகிரியில் உள்ள மலை வாழ் கிராமங்களில் யாத்திரை நடக்கும். அதன்பிறகு, நவம்பர் 29ஆம் தேதி முதல், நகர்ப்புறங்களில் யாத்திரை நடைபெறும்.
தகவல் ஒலிபரப்புத்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்கள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கிய பத்திரிகை தகவல் அலுவலகம், சேப்பாக்கம் தூர்தர்ஷன் வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இனி இது தகவல் மாளிகையாக இயங்கும்” என தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் அலுவலகம் (பி.ஐ.பி.), சேப்பாக்கம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலக வளாகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று (நவ.09) நடைபெற்றது. இதிக்ல் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, பத்திரிகை தகவல் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு: கேரள பெண் ரூ.1 கோடி நஷ்டஈடு செலுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு