திருவள்ளூர்: திருமழிசையைச் சேர்ந்தவர் எல்லப்பன் (38). இவர் கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க பணத்தை எடுத்துக் கொண்டு வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது இயற்கை உபாதைக்காக சாலையின் ஓரத்தில் நின்ற நேரத்தில், எல்லப்பனை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், சரமாரியாக தாக்கி உள்ளது.
மேலும் அவரிடம் இருந்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போனையும் அந்த கும்பல் பறித்து உள்ளது. பின்னர் அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து தப்பி ஓடிய கும்பலில் உள்ள 3 பேர், திருமழிசையைச் சேர்ந்த தங்கம், லோகேஷ் மற்றும் கார்த்திக் என அவர்களின் புகைப்படம் மற்றும் சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகள் உடன், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட வெள்ளவேடு காவல் நிலையத்தில் எல்லப்பன் புகார் அளித்து உள்ளார்.
ஆனால், உரிய ஆவணங்களோடு புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருந்தது மட்டுமல்லாமல், புகாரை திரும்பப் பெறுமாறும், வழிப்பறி செய்யாமல் திருடிச் சென்றதாக புகாரை மாற்றி அளிக்குமாறும் வெள்ளவேடு உளவு பிரிவு உதவி ஆய்வாளர் திருப்பதி மற்றும் தலைமைக் காவலர் சவரிதாஸ் ஆகியோர் எல்லப்பனை மிரட்டியதாக கூறப்படுகிறது.