சென்னை: மேற்கு சைதாப்பேட்டை ரெட்டி குப்பம் தெருவில் வசிப்பவர் தாணுமல்லையா பெருமாள் (69). இவருக்கு திருமணமாகி ராமலட்சுமி(65) என்ற மனைவியும், அருணா(34) என்ற மகளும் உள்ளனர். மேலும் பெருமாள், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில் தற்பொழுது தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகின்றார்.
மேலும் இவரது வீட்டில் பெரம்பூரை சேர்ந்த உசேன்(38) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் இன்று காலை இவரது வீட்டிற்கு வந்த கார் ஓட்டுநர் உசேன் தனது குழந்தைக்கு பிறந்த நாள் என்றும் அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார். உடனே பெருமாள் கதவை திறந்து ஓட்டுநரை உள்ளே அழைத்த உடன் உசேன் தான் வாங்கி வந்த சுவிட் பாக்ஸை கொடுத்த நேரத்தில் உள்ளே நுழைந்த அவனது கூட்டாளிகள் மகள் அருணா கழுத்தில் கத்தியை வைத்து தங்களுக்கு பணம் வேண்டும் என கத்திமுனையில் மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பதறிப் போன பெருமாள் 10 ஆயிரம் தருகிறேன், எனது மகளை விட்டு் விடுமாறு கெஞ்சினார். அதற்கு செவி சாய்க்காத உசேன் மற்றும் அவனது கூட்டாளிகள் தங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டும், இல்லையென்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்க முயன்றனர். உடனே பெருமாள் மனைவி ராமலட்சுமி அவர்களை தடுக்க வந்த போது அந்த கும்பல் கத்தியால் அவரது கையை வெட்டியது.