சென்னை: மத்திய சென்னையின் திமுக எம்பி தயாநிதி மாறன், கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதில் "ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள், இந்தி மட்டும் தெரிந்த பீகார், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைக் கற்று கொண்டு கட்டுமானப் பணிகள், கழிவறைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று பேசியிருந்தார்.
தயாநிதி மாறனின் இந்த பேச்சு, இந்தி பேசும் பீகார் மற்றும் உத்தர பிரதேச மக்களை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி, இந்தியா கூட்டணியில் (INDIA ALLIANCE) உள்ள கட்சிகளை டேக் செய்து பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து திமுக இடம் பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் உள்ள இந்தி பேசும் மாநிலத் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் இந்திய கூட்டணித் தலைவர்களும் தயாநிதி மாறனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களுடனான சந்திப்பில், எம்பி தயாநிதியிடம், திமுகவைச் சேர்ந்த முக்கிய நபர்கள் பேசும் பழைய வீடியோக்கள் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்யப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தயாநிதி மாறன் ஒரு பழமொழியை கோடிட்டு பதில் அளித்து இருந்தார். அதில் "வேலையில்லா முடி திருத்துநர் பூனையைப் பிடித்து சிரைப்பார்களாம்" என்ற பழமொழியை கூறியிருந்தார்.