சென்னை:நந்தம்பாக்கம் அடுத்த மணப்பாக்கம் சந்திப்பில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் தலைமை காவலர் சாலமன் சதீஷ் (44). இப்பகுதியில் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் அப்பகுதியில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உள்ளிட்டோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பெரும் சிரமத்திற்குள்ளாவது வழக்கம்.
சிக்கலான நேரத்திலும் கூட போக்குவரத்து தலைமை காவலர் சாலமன் சதீஷ் மிகவும் சுறுசுறுப்பாக தனது பணியை செய்து வந்துள்ளார். இதனை சென்னையில் வசிக்கும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர் பாஸ்கரபாண்டியனின் மகள் மோனா மிர்தண்யா (6) தினந்தோறும் பள்ளிக்கு சென்று வரும் போது பார்த்துள்ளார். இதையடுத்து தலைமை காவலர் சாலமன் சதீஷின் பணியை பாராட்டி மோனா மிர்தண்யா டைரி பரிசளித்துள்ளார்.