சென்னை:சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. ஆர். ரவீந்திரநாத் இன்று (பிப்.04) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, 'நீட் நுழைவுத்தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இளநிலை மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெறுவதற்காக, சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் மாதம் ஏகமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட இம்மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆளுநரின் ஜனநாயக விரோதப்போக்கை கண்டித்து வந்தன. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் போக்கிற்கு எதிராக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் உள்ளிட்டப் பல்வேறு மாணவர் அமைப்புகளும் குரல் கொடுத்து வந்தன.
நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்னை தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆளுநர் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, நீட் நுழைவுத்தேர்வு சமூகநீதிக்கு எதிராக இல்லை என்ற காரணத்தைக் கூறி, அந்த மசோதாவை தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்தச் செயல் மாநில உரிமைகளுக்கு எதிரானது. பாஜக அரசு என்ன நினைக்கிறதோ அதை நடைமுறைப்படுத்தக்கூடிய ஒரு முகவராக, தமிழ்நாடு ஆளுநர் செயல்படுகிறார்.
மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்
ஆளுநரின் இந்தப்போக்கு சமூகநீதிக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கும் முதல் தலைமுறை மாணவர்களுக்கும் எதிரானது. தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாடு மக்களின் உணர்வுகளையும் இழிவு படுத்தியுள்ளார்.
எனவே, மாநில உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.
வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆளுநர் சுட்டிக்காட்டுவது சரியல்ல. ஏனெனில், அது தமிழ்நாடு அரசின் மருத்துவக்கல்லூரி அல்ல. கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் உதவியுள்ளது என ஆளுநர் தரப்பில் கூறப்படுவது சரியல்ல.
நீட் நுழைவுத் தேர்வு, பயிற்சி மையங்களில் பயிற்சி பெற முடியாத நிலை கிராமப்புற மாணவர்களுக்கு உருவாக்குகிறது. பயிற்சி மையங்களில் சேர வசதியில்லாத ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாதிக்கிறது. அரசுப்பள்ளி, மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது.
இதை நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு போதிய தரவுகளுடன் உறுதி செய்துள்ளது. அது மட்டுமல்ல, நீதியரசர் கலையரசன் குழுவும் இதை உறுதிசெய்துள்ளது.
கட்டணக் கொள்ளையைத் தடுக்க இயலவில்லை
நீட் மட்டுமல்ல, எந்த ஒரு போட்டித்தேர்வும் இன்றைய நிலையில் வசதிபடைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
இந்த உண்மையைக் கருத்தில் கொள்ள ஆளுநர் தவறியது வருத்தமளிக்கிறது. நீட் ஏழை எளிய மாணவர்களிடம் இருந்து பொருளாதாரச் சுரண்டலைத்தடுக்கிறது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் கூறுவதும் சரியல்ல. நீட் தேர்வால் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இயலவில்லை. நீட் தேர்வுக்கும் கட்டணத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லை.
ஏற்கெனவே 100 விழுக்காடு தனியார் மருத்துவக்கல்லூரி இடங்களுக்கும் கட்டண நிர்ணயம் இருந்தது. நிகர்நிலை பல்கலைக்கழக கட்டணத்தை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், ஒன்றிய அரசு நிகர்நிலை பல்கலைக்கழக கட்டணத்தை நிர்ணயம் செய்யவேயில்லை. ஒன்றிய அரசு தேசிய மருத்துவ ஆணையச்சட்டத்தின் (NMC) மூலம் 50 விழுக்காடு மருத்துவ இடங்களுக்கு மட்டுமே கட்டணம் முறைப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.