சென்னை:வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்பயா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான சிறப்பு ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஜூலை23) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூகநல பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் சம்பு கல்லோலிக்கா, கூடுதல் ஆணையர் தேன்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 'நீதிமன்ற உத்தரவின்படி, காவல் ஆணையர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை சென்னை காவல் துறையும், சமூக நலத்துறையும் இணைந்து நடத்தும்.
பெண்களுக்கு ஆலோசகர்கள்
இந்த மையமானது மூன்று வருடங்கள் தொடர்ந்து செயல்படும். இங்கு புகார் அளிக்க நேரடியாக வருபவர்களுக்கும்; பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண் ஆன 181 புகார் அளிப்பவர்களுக்கும்; அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மூலம் புகார்கள் அளித்து வருபவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படும்.
பெண்களுக்கான ஆலோசகர், குழந்தைகளுக்கான ஆலோசகர் மற்றும் சட்ட ஆலோசகர் என மூன்று ஆலோசகர்கள் இங்கு உள்ளனர்.
இந்த மையமானது நிர்பயா நிதித்திட்டத்தின்கீழ் சென்னையில் செயல்படுகிறது. தாம்பரத்தில் ஒரு மையமும் எழும்பூரில் ஒரு மையமும் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், இது மூன்றாவது மையமாக இன்று முதல் செயல்படும்'என்றார்.