தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தெருக்கூத்து கலையை மையப்படுத்தி வெளியாகும் முதல் திரைப்படம் 'டப்பாங்குத்து' - திண்டுக்கல் லியோனி! - Dindigul Leoni news

தெருக்கூத்து கலையை மையப்படுத்தி வெளியாக இருக்கும் முதல் திரைப்படமாக 'டப்பாங்குத்து' படம் இருக்கும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

Dabangtu film crew
டப்பாங்குத்து திரைப்பட குழுவினர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 2:27 PM IST

சென்னை:டப்பாங்குத்து படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், நாட்டுப்புற கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மருதம் நாட்டுப்புற நிறுவனம் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஜெகநாதன் தயாரித்திருக்கும் திரைப்படம் 'டப்பாங்குத்து'. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எஸ். டி. குணசேகரன் எழுத, கிராமிய கலையின் நுட்பத்தை ஆய்வு செய்துள்ள ஆர். முத்து வீரா இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் 'தெற்கத்தி பொண்ணு' புகழ் சங்கர பாண்டி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடிகளாக தீப்தி, துர்கா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தெருக்கூத்து கலைஞர்களும் நடித்துள்ளனர். ராஜா கே. பக்தவச்சலம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை டி. எஸ். லட்சுமணன் கவனிக்க, சண்டை பயிற்சிகளை ஆக்க்ஷன் பிரகாஷ் , நாதன் லீ ஆகியோர் கையாண்டிருக்கிறார்கள்.

'டப்பாங்குத்து' படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''தமிழின் தொன்மையான இசை வடிவங்களான தெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவு என பல வகை உண்டு. இவை அனைத்தையும் ஒலிப்பதிவாக வெளியிட்ட நிறுவனம் ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் வெளியிட்ட நூற்றுக்கணக்கான பாடல்களிலிருந்து 15 பாடல்களை தேர்வு செய்து அதனை இந்த திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்'' என்றார்.

நடிகர் சங்கர பாண்டி பேசுகையில், '' டப்பாங்குத்து என்பது திரைப்படம் மதுரை சார்ந்து தெருக்கூத்து கலைஞர்களின் எளிய வாழ்வியலை எதார்த்தமாக விவரிக்கும் திரைப்படத்தில் நான் கதாநாயகனாக நடித்திருக்கிறேன். இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மதுரையை தமிழ் திரை உலகினர் வன்முறைக் களமாக காட்சி படுத்தி வருகிறார்கள். ஆனால் அசலில் மதுரை ஒரு கலை நகரம். மதுரை நகரம் 6000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக கலைகளை வளர்த்தெடுத்து வரும் நகரம். அப்பகுதியில் வாழும் தெருக்கூத்து எனும் கலை வடிவத்தை... அந்த கலைஞர்களின் வாழ்வியலை எளிய படைப்பாக சொல்லி இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற பாடல்கள் தான். இந்தப் பாடல்களைப் பாடி வீதியோர நாடகங்களில் நடித்து தான் நான் இந்த இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறேன். அந்த காலத்து தெருக்கூத்து கலையின் கலை வடிவத்தினை 2K கிட்ஸ்களும் தெரிந்து கொள்ளும் வகையில் படைப்பை உருவாக்கி இருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

திண்டுக்கல் ஐ. லியோனி பேசுகையில், ராம்ஜி கேசட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் 'டப்பாங்குத்து'. டப்பாங்குத்து என்ற சொல் எப்படி பிரபலமானது என்றால், நரிக்குறவர் இன மக்கள் தங்களது கழுத்தில் டால்டா டப்பாக்களை அணிந்து கொண்டு அதில் தாளம் போட்டு பாட்டு பாடுபவர்கள். இதை பார்த்த இரண்டு முதல்வர்களான எம்ஜிஆர்- ஜெயலலிதாவும் தங்களது கழுத்தில் அணிந்து, ஒரு திரைப்படத்தில் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க..' என பாட்டு பாடி பிரபலப்படுத்தினார்கள்.

நாட்டுப்புறப்பாட்டு என்பது நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றிணைந்தது. கர்நாடக சங்கீதம் ஆட்சி செய்த அந்த காலத்தில் முதன்முதலாக தமிழ் திரைப்படத்தில் நாட்டுப்புற பாடல்களை அறிமுகம் செய்தவர் கலைவாணர் என் எஸ் கே. 'நாட்டிற்கு சேவை செய்ய நாகரிக கோமாளி வந்தானய்யா..' எனும் அற்புதக் கலைஞர்.

கரகாட்டத்திற்கு 'கரகாட்டக்காரன்', வில்லுப்பாட்டிற்கு 'வில்லுப்பாட்டுக்காரன்' என்று ஒரு படம் வந்தது. ஆனால் தெருக்கூத்து என்ற ஒரு கலையை மையப்படுத்தி வெளியாக இருக்கும் முதல் திரைப்படம் இந்த 'டப்பாங்குத்து'. தெருக்கூத்து என்பது ஒரு இருபது அடிக்குள் தான் இருக்கும். இங்கு ஒரு குழு, அங்கு ஒரு குழு, ஓடி ஓடி ஆடும். இந்த தெருக்கூத்தில் ஆடும் கலைஞர்கள் இந்தப் பாட்டு தான் என்றெல்லாம் அனைத்து வகையான பாடல்களும் பாடுவார்கள். மக்களை 10 முதல் 11 மணி நேரம் வரை சிரிக்க வைப்பதற்கு தெருக்கூத்து கலைஞர்களால் மட்டுமே இயலும்.

தெருக்கூத்து கலையை வளர்ப்பது என்பது கடினமானது. அந்தக் கலைஞர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது.
தெருக்கூத்து. கலைஞர்களின் கடும் உழைப்பை போற்றும் வகையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். '' என்றார்.

இதையும் படிங்க:ரசிகர்கள் மத்தியில் குவியும் ஆதரவு.. 'இறுகப்பற்று' திரைப்படத்திற்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details