சென்னை: சென்னையை சேர்ந்த ரமேஷ் நடனத்தில் ஈடுபாடு அதிகம் என்பதால் தனது பெயரை டான்சர் ரமேஷ் என மாற்றிக் கொண்டார். 50 வயதான இவர் மூர்மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையோர கடைகளில் தினக்கூலிக்கு வேலை பார்த்து வந்தார். சிறுவயது முதல் மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடவும் அவ்வப்போது செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நண்பர்களின் வழிகாட்டலால் இன்ஸ்டாகிராமில் தனது நடனத்தை ரீல்ஸ் வீடியோவாக போடத்துவங்கினார்.
நடன கலைஞர் ரமேஷ் மாயம் - போலீசில் மனைவி புகார் ரமேஷின் தனித்துவமான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் அவரை பிரபலமாக்கியது. இதன் மூலம் தனியார் தொலைக்காட்சி நடத்தும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் ரமேஷ்க்கு கிடைத்தது. இதன் மூலம் பிரபலமடைந்த ரமேஷ் பொருளாதார ரீதியாகவும் வலுவடைய இந்த பிரபலம் உதவியுள்ளது.
நடன கலைஞர் ரமேஷ் மாயம் - போலீசில் மனைவி புகார் இந்நிலையில் தான் ரமேஷை காணவில்லை என அவரது மனைவி இன்பவள்ளி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். கடந்த 11ஆம் தேதி ஷுட்டிங்கிற்கு அழைத்து செல்வதாக ரமேஷை ரஞ்சித், குமார், ஜெய், ராஜ்குமார் ஆகியோர் அழைத்து சென்றதாகவும், அதன் பிறகு ரமேஷ் வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.
நடன கலைஞர் ரமேஷ் மாயம் - போலீசில் மனைவி புகார் இதனால் அதிர்ச்சியடைந்து விசாரித்த போது ரமேஷின் முதல் மனைவியான சித்ரா என்பவர் ரமேஷை தாக்கி போதை பொருள் கொடுத்து கடத்தி வைத்திருப்பது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். மேலும் ரமேஷை அழைக்க சென்ற போது சித்ரா அடியாட்களை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், இதனால் பயந்து நான்கு நாட்களாக வீட்டைவிட்டு வெளியில் செல்லவில்லை என அவர் கூறினார். உடனடியாக தங்களுக்கு பாதுகாப்பு அளித்து தனது கணவர் ரமேஷை மீட்டுத்தர வேண்டும் என காவல்துறைக்கு இன்பவள்ளி வேண்டுகோள் விடுத்தார்.
டான்சர் ரமேஷ் மாயம் - போலீசில் மனைவி புகார் இது குறித்து சித்ராவிடம் கேட்டபோது, கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷுடன் திருமணம் நடந்ததாகவும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் பிரிந்து சென்றதாக தகவல் தெரிவித்துள்ளார். தற்போது மகளின் திருமணத்திற்காக வந்த ரமேஷ் மனம்மாறி தன்னுடன் வாழ முடிவு செய்திருப்பதாகவும், யாரும் அவரை கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.மனைவி என்பதற்கான ஆதாரங்களை காட்டினால் ரமேஷை அனுப்பி வைப்பதாகவும், ரமேஷின் பெயரை கெடுக்க பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த புகார் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.