கர்நாடக மாநிலம், மேகதாது அருகே பெங்களூர் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்ய ஏதுவாக 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த அணைக் கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலின்றியும், வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பின்படி எந்த அனுமதியும் பெறாமலும் அணை கட்டும் பகுதியில் கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.
மேலும், அச்செய்தியில், அணைக் கட்டுவதால் 5,252 ஹெக்டேர் வனப்பகுதி தண்ணீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும், வன விலங்குகள் சரணாலயத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.