இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நல்ல ஆரோக்யமாக இருக்கும் பால் முகவர்கள், வணிகர்கள், பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள், அப்பாவி பொதுமக்கள் என பலரையும் "கோவிட்-19 (கரோனா) பரிசோதனை செய்ய வேண்டும் வாருங்கள்" என கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் வலுக்கட்டாயமாக அழைத்து செல்கின்றனர்.
"நாங்கள் ஆரோக்யமாகத் தான் இருக்கிறோம், எங்களது உடம்பில் எந்த உடல் உபாதைகளும் இல்லை" என பரிசோதனைக்கு வர மறுப்போரிடம், நீங்கள் வர மறுத்தால் காவல்துறையினரை அழைத்து வந்து உங்களை குண்டுக்கட்டாக தூக்கிச் செல்ல நேரிடும் என மிரட்டுகின்ற நிகழ்வுகளும் தமிழ்நாடு முழுவதும் அரங்கேறி வருகிறது.
குறிப்பாக நேற்று (ஆகஸ்ட் 5) தென்சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர் ஒருவரை "கோவிட்-19" பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர் வலுக்கட்டாயமாக அழைத்துள்ளார். ஆனால் தான் ஆரோக்யமாக இருப்பதால் வர முடியாது என அவர்களோடு செல்ல மறுத்துள்ளார். உடனே அந்த தன்னார்வலர் நாளை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரோடு வருவதாக கூறி மிரட்டிச் சென்றுள்ளார்.
அண்மையில் கூட சென்னை, என்.எஸ்.கே. நகர் பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட வணிகர்களை வலுக்கட்டாயமாக பரிசோதனைக்காக சுகாதாரப் பணியாளர்கள் அழைத்து சென்று அதில் சுமார் 20 பேருக்கு மேல் பாஸிட்டிவ் வந்திருப்பதாக கூறி தனிமைப்படுத்தியுள்ளனர். தற்போது அந்த 20க்கு மேற்பட்ட வணிகர்களும் தங்களின் கடைகளுக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் வரத் தயங்குவதால் வணிகம் இல்லாமல் கடும் சிரமத்திலும், மிகுந்த மன உளைச்சலிலும் இருக்கின்றனர்.