சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தாமஸ் சாலையில் காவல் துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரோனா தடுப்பூசி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டு காவல் துறையினருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட பிறநோய் உள்ளவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் கண்ணன், தெற்கு மண்டல இணை ஆணையர் லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய காவல் ஆணையர், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமக்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றுவது அவசியம் குறித்து உரையாற்றினார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் தயக்கம்காட்டாமல் தடுப்பூசியை உடனடியாகச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற அவர், கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்து அனைவருக்கும் சானிடைசர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், "சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர். அனைவரும் அரசு வழங்கியுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களில் பலர் முகக் கவசங்களை வைத்துக்கொண்டே அணியாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
விதிகளை பின்பற்றாத 500-700 பேர் மீது தினமும் வழக்குப்பதிவு முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலமே கரோனாவை ஒழிக்க முடியும். சென்னையில் நாளொன்றுக்கு முகக்கவசம் அணியாத, தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காத 500-700 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன.
சென்னை காவல் துறையில் மூன்றாயிரத்து 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை காவல் அலுவலர்கள், ஆளிநர்கள் என சுமார் ஏழாயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புறக் கலைஞர்கள் மூலமும், கரோனா விழிப்புணர்வுப் பாடல்கள் மூலமும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.