'அப்பா காசு இல்லப்பா'- குடிபோதையில் போலீசாரிடம் சிக்கிய வாலிபரின் வீடியோ வைரல் சென்னை: அண்ணா சாலை காவல் நிலையம் எதிரே நேற்றிரவு போக்குவரத்து போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அளவுக்கதிகமான மதுபோதையில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து பிரீத் ஆனலைசர் கருவியில் ஊதச்சொல்லி போலீசார் கூறியுள்ளனர்.
போதையில் இருந்த வாலிபர் ஃபைன் போட வேண்டாம் எனவும், தனது தாய்க்கு தெரிந்தால் திட்டுவார்கள் எனக்கூறி போலீசாரிடம் கெஞ்சி கதறி உள்ளார். ஒரு கட்டத்தில் அந்த வாலிபர் போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சிய போது, அவரது இடுப்பில் சிறிய கத்தி இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்து அண்ணா சாலை போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், போலீசார் அந்த போதை வாலிபரை பிடித்து விசாரணை நடத்த அழைத்துச் சென்ற போது, விசாரணைக்கு ஒத்துழைக்காமல், விட்டுவிடுங்கள் எனக்கூறி அந்த போலீசாரின் காலிலேயும் விழுந்து போதை ஆசாமி கெஞ்சியுள்ளார்.
இதனையடுத்து, போலீசார் அந்த போதை ஆசாமியிடம் விசாரணை நடத்திய போது, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அவர் சையது முகமது அல்பா(26) என்பதும், அவர் மீது ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் வழிப்பறி, அடிதடி உட்பட 6-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
சையது வழிப்பறியில் ஈடுபடுவது குறித்து அவரது தாய்க்கு தெரியவந்து திட்டியதால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருந்தி வாழ்வதாக கூறி சையது வேலைக்காக சென்னைக்கு வந்துள்ளார். பின்னர், அண்ணா சாலையில் உள்ள மால் ஒன்றில் துணிக்கடையில் வேலைபார்த்து வந்த சையது, நேற்று நண்பர்களுடன் இணைந்து மது அருந்திவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டு வரும்போது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.
மேலும், சையது இடுப்பில் வைத்திருந்த கத்தியை நண்பரிடம் வாங்கி பாதுகாப்பிற்காக வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் சையது மீது ஆயுத தடைச் சட்டம் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அண்ணா சாலை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:புதுச்சேரியில் ரவுடியை வெட்டிக்கொலை செய்த மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!