சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து, மதுரை மாநாட்டில் முறையாக பாதுகாப்புகள் வழங்கவில்லை என்பது தொடர்பாக புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று அதிமுக எழுச்சியோடு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இது போன்ற வரலாற்றைக் கண்டதில்லை. இந்திய திருநாடே இது போன்ற மாநாட்டை கண்டதில்லை.
வங்கக்கடலே மதுரையில் எழுந்ததுபோல லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட வீர எழுச்சி மாநாடு நடந்தது. இதில் 15 முதல் 20 லட்சம் தொண்டர்கள் வந்தனர். இந்த மாநாடு வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய மாநாடு. 4 மாதத்திற்கு முன்பே வீர எழுச்சி மாநாடு அறிவிக்கப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டன. அப்போதிலிருந்தே அதிமுகவின் எழுச்சியை, வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் திமுகவினர். இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்று ஸ்டாலினுக்கு உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த மாநாடு வீர வரலாற்றை விளக்கும் வகையில் சிறப்பான மாநாடாக இருக்கும் என்பதால், ஆளும் கட்சியான திமுக, பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தியது. ஆனாலும், 15 முதல் 20 லட்சம் தொண்டர்கள் வருகையால் 40 ஆயிரம் வாகனங்கள் மதுரையை நோக்கி படையெடுத்தது. மாநாடும் சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள், அதனால் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். மதுரையில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்த வித இடையூறும் இல்லாமல் மாநாடு நடத்த பாதுகாப்பு கேட்டோம்.
அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், கூடுதல் போலீசாரை போடுவோம். பாதுகாப்பு கொடுப்போம் என்று காவல் துறை சார்பில் நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. மாநாட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல் துறை முறையாக போக்குவரத்தை சீர் செய்யவில்லை. நீதிமன்றம் சொல்லியும் காவல் துறை அதைக் கேட்காமல், போக்குவரத்தை சரி செய்யாமல் இருந்தனர். நீதிமன்ற உத்தரவை காவல் துறை எப்படி மீற முடியும்? மதுரை மாநாட்டில் எந்த பிரச்னையும் வராமல் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை.
ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சைக் கேட்டு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகத்தான் கருத முடியும். நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவை காவல் துறை மீறியுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் யார்? அதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஆகஸ்ட் 9 அன்று நீதிமன்றம் கொடுத்த உத்தரவுக்கு காவல் துறை கீழ் படியவில்லை. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போன்றவை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாநாடுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் வருவார்கள் என்பதால், முன் கூட்டியே உணவு தயார் செய்யப்பட்டது. அதில் சில குறைகள் இருந்தாலும், இது போன்று எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க பார்த்துக் கொள்வோம். ஸ்டாலின் அப்பா பெரிய நடிகர். போட்டோஷூட் நடத்தி ஸ்டாலின் நடித்து வருகிறார். ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வந்த மாதிரி தெரியவில்லை. இவர்களுக்கு ஆட்சியை நடத்த தெரியவில்லை. கையில் அதிகாரத்தை வைத்துக் கொண்டு கண்ணீர் சிந்துவது அசிங்கமாக இல்லையா? நீட்டை ஒழிப்போம் என்று ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் திமுக சொல்கிறது.