சென்னை: புரவி புயல் டிசம்பர் 4ஆம் தேதி பாம்பன்- கன்னியாகுமரி கடற்கரையைக் கடக்கக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரவி புயல் டிச., 4 இல் கரையைக் கடக்கும் - வானிலை ஆய்வு மையம்! - தென்மேற்கு
15:31 December 01
தென்மேற்கு, அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவரும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, தீவிர புயலாக நாளை(டிச.2) இலங்கைப் பகுதியில் மாலை அல்லது இரவில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மேற்கு - தென் மேற்காக நகர்ந்து, தென் தமிழகத்தை நோக்கி கன்னியாகுமரி மற்றும் பாம்பன் கடற்கரையை டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கடக்கக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி மதியம் முதல் மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதே போல், டிசம்பர் 3 ஆம் தேதி காற்று மணிக்கு 55-65 கிலோ மீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.