காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரம், செம்பரம்பாக்கம் ஏரி. இதன் பரப்பளவு 25.51 ச.கிமீ. இந்த ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடி, இதன் முழு கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியின் கன அடியாகும். தற்போது வடகிழக்கு பருவ மழை, கிருஷ்ணா நதி நீர் வரத்தினால் ஏரிக்கு அதிகமான நீர் வரத்து உள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்க உத்தரவு - செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
09:17 November 25
நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஏரியின் நீர்மட்டம் 22 அடியைத் தொடும்போது, அணையின் வெள்ள உபரிநீர் வெளியேற்றும் ஒழுங்கு முறை வழிகாட்டுதலின்படி வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது ஏரியின் கொள்ளளவு 22 அடியை நெருங்கும் நிலையில், இன்று மதியம் 12 மணியளவில், வினாடிக்கு ஆயிரம் கனஅடி என்ற வீதத்தில் உபரி நீரைத் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏரியின் நீர் வரத்து நொடிக்கு 4 ஆயிரத்து 27கன அடியாக உள்ள நிலையில், நீர்வரத்து கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றத்தின் அளவு உயர்த்தப்படும் என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவலூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு திருநீர்மலை, அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பவும் பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.