தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாண்டஸ் புயல் எதிரொலி: இதுவரை சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் 5 பேர் பலி - mandous cyclone

மாண்டஸ் புயலின் காரணமாக ஏற்பட்ட சேதத்தால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 5 பேர் பலியாகினர்.

சாலையில் கிடந்த ஒயரை மிதித்து மின்சாரம் பாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு
சாலையில் கிடந்த ஒயரை மிதித்து மின்சாரம் பாய்ந்ததில் இருவர் உயிரிழப்பு

By

Published : Dec 10, 2022, 11:03 AM IST

Updated : Dec 10, 2022, 12:43 PM IST

சென்னை: மடிப்பாக்கம் ராம் நகர் தெற்குப்பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வந்தவர், லட்சுமி(45). இவருக்கு ஆர்த்தி, அபினயா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், குழந்தைகள் மற்றும் அண்ணனின் மகன் ராஜேந்திரன் என்பவருடன் வசித்து வந்தார்.

நேற்று மாண்டஸ் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் லட்சுமியின் கூரை வீடு சேதமாகியதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருக்கக்கூடிய பிளாட்டின் கார் பார்க்கிங்கில் லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறங்குவதற்காக சென்றுள்ளனர்.

பின்னர் கூரை வீட்டிலிருந்த பொருளை எடுத்து வருவதற்காக லட்சுமி மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சென்றபோது தெரியாமல் சாலையில் அறுந்து கிடந்த வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இதைப் பார்த்து அச்சமடைந்த குழந்தைகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு அருகிலிருந்தோர் இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வந்த மடிப்பாக்கம் போலீசார் இருவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் மாண்டஸ் புயலால் மரம் சாய்ந்து மின்கம்பத்தில் விழுந்தது. அப்போது மின்சாரம் பாய்ந்து 2 வட மாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சென்னை சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியைச் சேர்ந்தவர் கேசவவேல்(42). ஓட்டு வீட்டில் வசித்து வரும் இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். கேசவவேல் வீட்டின் அருகிலேயே, அவரது நண்பர் தினகரன் இரண்டு மாடி கட்டடம் ஒன்றையும் கட்டி வருகிறார்.

இந்நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக நேற்று கனமழை பெய்ததால், கட்டப்பட்டு வரும் மாடி சுவர் சரிந்து கேசவவேல் ஓட்டு வீட்டின் மீது விழுந்துள்ளது. அப்போது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த கேசவவேல், லட்சுமி, சிறுமி ஆகியோர் மீது சுவர் விழுந்ததில் படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக அருகிலிருந்த பொதுமக்கள் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி லட்சுமி உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாண்டஸ் புயலால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: கரையைக் கடந்தது மாண்டஸ் - சென்னையில் கோர தாண்டவம்

Last Updated : Dec 10, 2022, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details