சென்னை:சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கிரிஷ் என்ற சிறுவன் வசித்துவருகிறார். கடந்த 3ஆம் தேதி இரவு அடுக்குமாடி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது குடியிருப்பில் நிறுத்திவைத்திருந்த சிறுவனின் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் சென்றார்.
திருடிச் செல்வதைக் கண்ட சிறுவன் துரத்திச் சென்று திருடனைப் பிடிக்க முயன்றார். ஆனால் திருடன் சைக்கிளுடன் தப்பிச் சென்றார். இதனால் மனமுடைந்த சிறுவன் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சைக்கிள் திருடுபோனதால் கடந்த சில நாள்களாகவே சிறுவன் மனவேதனையோடு இருந்துவந்துள்ளார்.
சிறுவன் கிரிஷ் வேதனையை அறிந்து கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் இது தொடர்பாக விரைந்து கண்டுபிடிக்கும்படி தனிப்படை காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
தனிப்படை காவல் துறை
காவல் துறையினர் அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில், அடையாளம் தெரியாத நபர் நைசாக அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் நுழைந்து சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் இடத்திற்குச் செல்கிறார். பிறகுச் சைக்கிளைத் திருடிச் செல்கிறார். தன்னுடைய சைக்கிளைத் திருடிச் செல்வதைக் கண்டு சிறுவன் கிரிஷ் துரத்திச் செல்வது சிசிடிவியில் பதிவாகி இருந்தது.