தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் சைக்கிள் பயன்பாட்டை அதிகரிக்கும் 'சைக்கிள் 4 சேஞ்ச்' திட்டம்! - cycle

சைக்கிள் ஓட்டும்போது இதயத்துடிப்பு சீராகும், வயது முதிர்வு காரணமாக ஏற்படும் இதய வலுவிழப்பு, இதய அடைப்பு போன்ற பிரச்னைகள் தடுக்கப்படும். தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்துச் சுறுசுறுப்பு உண்டாகும் என ஏராளமான நன்மைகள் உள்ளதால், இப்போது மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையினரின் கவனம் திரும்பியிருக்கிறது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

சைக்கிள் 4 சேஞ்ச்
சைக்கிள் 4 சேஞ்ச்

By

Published : Oct 9, 2020, 8:26 PM IST

Updated : Oct 11, 2020, 8:12 PM IST

சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பயணம் செய்வதற்கு சைக்கிளை அதிகம் பயன்படுத்தி வந்தனர். ஆனால் காலங்கள் மாற மாற சைக்கிள் பயன்படுத்துவது வெகுவாக குறைந்தது. கிராமப்புறங்களில்கூட இருசக்கர வாகனம் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. விரைவாகவும், கொஞ்சம் சொகுசாகவும் பயணம் மேற்கொள்ள, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களே பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாக உள்ளது. இவை ஒருபுறம் சற்று பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றிலிருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபட்டு, சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாசு நிறைந்த காற்றைத் தொடர்ந்து சுவாசித்துக்கொண்டே இருப்பதால், நுரையீரல் சீக்கிரமே பழுதடைந்துவிடும் என்றும், உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனையும் பெற முடியாமல் போய்விடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உலகெங்கும் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது.

சைக்கிள் 4 சேஞ்ச்

புகை மாசுவால் இந்தியாவின் தலைநகரம் டெல்லி அதிக பாதிப்புகளை சந்தித்து வருவதை நாம் அறிவோம். கரோனா வைரஸ் தொடங்குவதற்கு முன்பிருந்தே டெல்லி வாழ் மக்கள் மாஸ்க்கும் கையுமாகத்தான் இருந்தார்கள்.

வெறும் வாகனங்கள் வெளியிடும் புகையினால் மட்டும்தான் காற்று மாசுபடுகிறதா? என்று கேட்டால், இல்லை என்பதுதான் பதில். தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப் புகை, விவசாயக் கழிவுகள், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பது, புகை பிடித்தல் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாட்டை நாம் குறைத்துக்கொண்டு சைக்கிளுக்கு மாறுவதன் மூலம் காற்று மாசுபடுவதை ஓரளவு நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அந்தவகையில், இளைஞர்களிடையே சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு "சைக்கிள் 4 சேஞ்ச்" (cycle4change) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் பல இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா சமயத்தில் வாகன பயன்பாட்டை குறைக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

'சைக்கிள் 4 சேஞ்ச்' திட்டம்

சென்னையில் சைக்கிள் 4 சேஞ்ச் திட்டம் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த நான்கு வழிமுறைகள் உள்ளன. முதலில் பொதுமக்களிடம் கருத்துகேட்பது, ஹேண்டில் பார் கணக்கெடுப்பது (handlebar survey), குறைகள் இருந்தால் சரிசெய்வது, கடைசியாக செயல்படுத்துவது. இந்த நான்கு வழிமுறைகளை செயல்படுத்துவதற்கு மாநகராட்சி தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக சென்னை பாண்டி பஜாரில் பாதசாரி பிளாசா (pedestrian plaza) அமைக்கப்பட்டது. அதில் நடப்பதற்கும் மற்றும் சைக்கிள் ஓட்டுவதற்கும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்தபடியாக சர்தார் படேல் சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு தனியாக சைக்கிள் சாலை அமைக்கும் பணி தொடங்கிவிட்டது. அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக பொதுமக்கள் இடையே ஆன்லைன் மூலம் கருத்துகேட்கும் பணி முடிந்துவிட்டது. அடுத்தகட்ட நடவடிக்கையாக ஹண்டில் பார் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. ஹண்டில் பார் கணக்கெடுப்பு என்பது நேரடியாக சைக்கிள் பாதை அமைக்கும் இடத்திற்கு சென்று அங்கு என்ன என்ன செய்யவேண்டும் என்பதைக் கண்டறிதல் ஆகும்.

இதுகுறித்து மாநகராட்சியுடன் இணைந்து சைக்கிள் 4 சேஞ்ச் திட்டத்திற்கான பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் என்ஜிஓ நிறுவன திட்ட மேலாளர் அஸ்வதியிடம் பேசினோம், "இந்தத் திட்டத்திற்கு முக்கியமானது பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று வர தரமான சாலை அமைப்பது. சைக்கிள் பாதை அமைப்பதற்கு, சைக்கிள் ஓட்டுபவர்களும் உதவியாக இருக்கலாம். இதற்காக மாநகராட்சி சென்னையில் உள்ள சைக்கிள் ஓட்டுபவர்களை (cyclist) அழைக்க உள்ளனர். முதற்கட்டமாக டிசம்பருக்குள் இந்த திட்டத்தை செயல்படுத்தி, அதன் மூலமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் எவ்வாறு பலன் அடைந்துள்ளனர் என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்” என்றார்.

சைக்கிள் 4 சேஞ்ச் குறித்து சைக்கிளிஸ்ட் பெலிக்ஸ் ஜான், "நான் கடந்த நான்கு ஆண்டு காலமாக சைக்கிள் ஓட்டி வருகிறேன். முதலில் ஆரோக்கியத்திற்குதான் சைக்கிள் ஓட்டினேன், பிறகு அதை விடமுடியவில்லை. இந்த திட்டத்திற்கு மக்கள் பங்களிப்பு முக்கியமாக இருக்கவேண்டும். சைக்கிள் சாலை அமைத்த பின் பயன்படுத்தவில்லை என்றால் வீணாகி விடும். மாநகராட்சி மக்கள் தொகை ஏற்ப இடத்தை தேர்வுசெய்து இந்த திட்டத்தின் கீழ் புதிய சைக்கிள் சாலை அமைப்பார்கள். இந்த திட்டம் சென்னையில் இன்னும் விரிவு அடையும். எனவே மக்கள் தாமாக முன்வந்து கலந்து கொள்ளவேண்டும். அருகில் உள்ள இடங்களுக்கு பைக், கார் போன்றவற்றை பயன்படுத்தாமல் சைக்கிளை பயன்படுத்துவதன் மூலம் சென்னையில் காற்று மாசுபாடு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

இதுபோன்ற திட்டங்கள் மூலம் சைக்கிள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமில்லாமல், காற்று மாசுபாடுவதும் குறையும் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

இதையும் படிங்க:கரோனாவுக்கு பிறகான காலத்தில் சைக்கிள்கள்

Last Updated : Oct 11, 2020, 8:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details