சென்னை: தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற அடிப்படையில் பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு பாஜகவினரின் பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்ததால் தன்னை பற்றி சமூக வலைதளத்தில் ஆபாசமாக அவதூறு பரப்பும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுவதாக அவர் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக பாபு என்ற ராணிப்பேட்டை பாஜக நிர்வாகி மற்றும் சில பாஜகவினர் தன்னை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்துக்களை பதிவிடுவதாக புகார் அளித்திருந்தார். மேலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வார் ரூம் என்ற பெயரிலும், பாஜக பிரமுகர் ஐடிவிங் என்ற பெயரில் மார்ஃபிங் செய்து ஆபாசமாக அவதூறு கருத்துக்களை பரப்புவதாக தெரிவித்திருந்தார்.