சென்னை:அதிமுக நிறுவனத் தலைவரும் மற்றும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 35-வது நினைவு தினம் சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் (Dr MGR Memorial) இன்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா என மூன்று அணிகளாக மரியாதை செலுத்தினர். இதில் முதலில் ஈபிஎஸ் தரப்பினர் உறுதிமொழி ஏற்று, எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர், ஓபிஎஸ் தரப்பினரும், சசிகலா தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சரும், ஈபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமாக வலம் வரும் சி.வி.சண்முகம், தனியாக தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற போராட்டத்தில், "பாஜகவும் திமுகவும் கூட்டணி அமைக்க உள்ளது" என சி.வி.சண்முகம் பேசியிருந்தார். இதற்கு அண்ணாமலை, "சி.வி சண்முகம் எப்போது பாஜகவில் இணைந்தார். பாஜகவின் கூட்டணி குறித்து அவர் எப்படி முடிவு எடுக்க முடியும்" என கிண்டலாக பதில் அளித்திருந்தார்.