சென்னை: ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (செப்.14) காலை 8 மணிக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொருட்களை பயணிகள் ரகசியமாக கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து அவர்களையும் சோதனைக்கு அழைத்துக் கொண்டனர். பின்னர் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை இணைந்து ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி பல மணி நேரமாக விசாரணை நடத்தினர். அதில் 73 பேர் கடத்தல் விவகாரங்களில் தலையிடாத பயணிகள் என்று தெரியவந்தது. இதையடுத்து அந்த 73 பேரையும் சுங்க அதிகாரிகள் வெளியில் செல்ல அனுமதித்தனர்.
அதன் பின்பு மீதமிருந்த 113 பயணிகளை சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். அதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்காத காரணத்தால், அதிகாரிகள் அவர்களை துருவி துருவி சோதனை இட்டதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று மாலை 3 மணிக்கு மேலாகவும் அந்த விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அந்த பயணிகள் எங்களை பசி பட்டினியில் வதைத்து கொண்டு இவ்வாறு விசாரணை நடத்துகிறீர்களே? என்று கூறி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், எங்களை வெளியில் அனுப்புங்கள் நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீண்டும் விசாரணைக்கு வருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதிகாரிகள் அவர்களை வெளியே அனுப்ப மறுத்துவிட்டு, பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே உணவு ஏற்பாடு செய்துள்ளனர்.
பின்னர் உணவு வந்ததும் அனைவரையும் தரையில் உட்கார வைத்து, வாழை இலைகள் போட்டு திருமண வீடு போல் சுங்கத்துறை அலுவலகத்தில் பந்தி பரிமாறப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், அதிகாரிகள் மீண்டும் தங்களது விசாரணை மற்றும் சோதனையைத் தொடங்கியுள்ளனர். மேலும் இந்த சோதனைகள் நேற்று நள்ளிரவு வரை நடந்ததாக தெரிகிறது.